Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பழநி நிலப்பதிவிற்காக மட்டுமே பொறுப்பு அதிகாரியாக ஜஸ்டின் மணிகண்டனை நியமித்த மாவட்ட பதிவாளர் மற்றும் பதிவுத்துறை தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் இதுவரை முறையான விசாரணை இல்லை எனவே வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்

0

'- Advertisement -

Ad banner

பழநி நிலமோசடி வழக்கில் ரகசிய தெரிந்த முக்கிய நபர் சிறையில் மர்ம மரணமடைந்து உள்ளார். பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் ஐசியூவில் உள்ளார்.இந்த வழக்கில் மர்ம நீடிக்கிறது. சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை என்று சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஐகோர்ட் கிளையில் வாதிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், பழநி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேணுகோபாலு சேனாபதி ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பழநியில் ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முறைகேடு வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது ஏற்கனவே போலி ஆவணப்பதிவுகள் தொடர்பாக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

பழநியில் உள்ள பிற தகுதியான அதிகாரிகளை புறந்தள்ளிவிட்டு, குறிப்பிட்ட இந்த நிலப்பதிவிற்காக மட்டுமே பொறுப்பு அதிகாரியாக ஜஸ்டின் மணிகண்டனை நியமித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த அதிகாரியை பணி அமர்த்திய மாவட்ட பதிவாளர் மற்றும் பதிவுத்துறை தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் இதுவரை முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

 

வழக்கு நிலுவையில் இருக்கும்போதே துறை சார்ந்த அமைச்சர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிப்பது விசாரணையின் நேர்மையை பாதிக்கும். மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிபிசிஐடி அமைப்பால் அரசு நிர்வாகத்தின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கின் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வரமுடியாது. இந்த விவகாரத்தில் நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை நடைபெறும் வகையில், வழக்கின் விசாரணையை சிபிசிஐடி அமைப்பிடமிருந்து ஒன்றிய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

 

இந்த விசாரணையை ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியை நியமித்து கண்காணிக்கவும், விசாரணையின் நிலை குறித்த விபரத்தை அவ்வப்போது ஓய்வு நீதிபதியிடம் தெரிவிக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வீராகதிரவன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, ”இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் (நிலத்தின் ரகசியம், பத்திரப்பதிவு பற்றி மதுரை மத்திய சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.இந்த வழக்கில் முக்கியமானவர் என்பதால் தான் கைது செய்யப்பட்டார். சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது இந்த வழக்கில் ஏதோ மர்மம் இருக்கிறது. அன்வர்தீன் இறப்பிலும் மர்மம் உள்ளது. சிபிசிஐடி போலீசார் விசாரணையில் திருப்தி இல்லை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என்றனர்.

 

அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ”அன்வர்தீன் உடல்நிலை பிரச்னை காரணமாக உயிரிழந்துள்ளார். இதில் அரசியல் சாயம் பூசக்கூடாது. வழக்கு விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது” என்றார். இதையடுத்து நீதிபதிகள், ”கோயில் தரப்பில் பதில்மனு தாக்கல் ெசய்ய வேண்டும். சிபிசிஐடி அறிக்கையை முழுமையாக படிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த மனுக்களின் மீதான விசாரணை ஆக. 24ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்” என கூறி விசாரணையை தள்ளிவைத்தனர்.

நில மோசடி புகாரில் கைதான சார்பதிவாளர், ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோர் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று இந்த வழக்கு நீதிபதி பாக்கியராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கும் ஜஸ்டின் மணிகண்டன் மீது துறை அதிகாரியே போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அதில், நிலத்தை வாங்கிய வி கந்தசாமி, நிலத்தை விற்ற மணி (வயது 64) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக ஆயக்குடி போலீசார் போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து இந்த நிலத்தை விற்ற மணியை கைது செய்தனர்.

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கட்டளைக்காக பதியப்பட்ட 1.80 ஏக்கர் நிலம் சொக்கிகுளம் அழகர்கோவில் ரோடு பகுதியில் உள்ளது. ரூ.60 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை மோசடியாக பட்டா மாற்றம் செய்ததாக அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.போலி ஆவணங்களை தாக்கல் செய்து பட்டா பெற்றதாக புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 40), உசிலம்பட்டி இளையராஜா (வயது 52) மற்றும் அப்போதைய மதுரை வடக்கு தாசில்தாரும், தற்போதைய ராமநாதபுரம் சப்-கலெக்டரும், அமைச்சர் நிர்மல்குமாரின் உறவினருமான உசிலம்பட்டி அன்பழகன், சிறுமலை காளிக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைதான சப்-கலெக்டர் அன்பழகனை சஸ்பெண்ட் செய்து வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

இதே வழக்கில் 11வது நபராக உள்ள மதுரை பீ.பீ.குளத்தை சேர்ந்த மதுரை வடக்கு தாலுகா முன்னாள் விஏஓவும், தற்போதைய மதுரை மேற்கு தாலுகாவில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் அரசன் நேற்று மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

* போலீசில் அதிகாரி திடீர் புகார் சார்பதிவாளருக்கு ஆஞ்சியோ

பழநி கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஜூலை 7ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஆயக்குடியில் புல எண் 87/3 கொண்ட 2.41 ஏக்கர் நிலத்தையும் பத்திரப்பதிவு செய்து கொடுத்து உள்ளார். ரூ.2 கோடி மதிப்பிலான இந்நிலம் வெறும் ரூ.9 லட்சத்திற்கு பதிவு செய்யப்பட்டது என்றும், இந்நிலம் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோயிலுக்கு சொந்தமானது என்றும் சர்ச்சை எழுந்தது.

 

இந்நிலம் உரிய ஆவணங்களை சமர்பிக்காமல் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி பழநி சார்பதிவாளர் ஈஸ்வரி ஆயக்குடி போலீசில் புகார் அளித்தார். அதில், ”ஆயக்குடி நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட போது உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மாவட்ட பதிவாளர், பத்திரப்பதிவு துறை ஐஜி அலுவலக அறிவுறுத்தலின்படி பத்திரப்பதிவு செய்து தந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை வாங்கிய பழநி அருகே டி.கே.என்.புதூரை சேர்ந்த கந்தசாமி (வயது 87), நிலத்தை விற்ற கோவை மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த மணி (வயது 64) ஆகியோரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், பழநி கோயில் நில முறைகேடு வழக்கில் கைதாகி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு (வயது 48), 2022ல் ஆஞ்சியோ சிகிச்சை செய்து ஸ்டண்ட் வைத்துள்ளதால், கார்டியாக் உள்ளிட்ட உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து ஆஞ்சியோ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஐசியுவில் நேற்று அனுமதிக்கப்பட்டார். கார்டியாக் இதயவியல் சிகிச்சையின் தொடர்ச்சியாக ரத்த அடைப்பு கரைக்கும் மருந்தான ஹெபாரின் வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்டமாக ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படவுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.