

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி, உதயநிதி ஸ்டாலினை சென்னை மற்றும் தஞ்சை போலீசார் கைது செய்ய முயன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான தடுப்புச் சட்டம், தகவல் தொழில் நுட்பப் பிரிவு சட்டம் என 3 வகைகளில் வழக்குப்பதிவுப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 9 பிரிவுகளுமே 7 ஆண்டுகளுக்கு உட்பட்ட தண்டனை வழங்கப்படும் சட்டப்பிரிவுகளாகும். ஒரு குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்யும்போது, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
அதில் முக்கியமாக 4 உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் போலீசாருக்கு வழிகாட்டுதல்களாக கூறியுள்ளது. அதன்படி, 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படும் சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்படும் வழக்குகளில் மட்டுமே போலீசார் கைது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு கீழ் தண்டனை கிடைக்கும் சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறவர் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது. உதயநிதி ஸ்டாலின் வழக்கில் 7 ஆண்டுக்கு கீழ் தண்டனை விதிக்கப்படும் சட்டப்பிரிவுகளில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சாட்சியை கண்டிப்பாக கலைப்பார் என கருதினால் அவரை கைது செய்யலாம். சாட்சியே யார் என தெரியாமல், இதில் கலைக்கவும் வாய்ப்பு இல்லை. மேலும் ஒருவரை கைது செய்யும் முன் 4 முறை சம்மன் அனுப்பியிருக்க வேண்டும். அவற்றை மதிக்காமல் இருப்பவரை மட்டுமே விசாரணைக்கு தேவை எனக் கருதி கைது செய்யலாம். அவருக்கு ஒரு முறை கூட சம்மன் அனுப்பவே இல்லை. 4வதாக சட்டம் ஒழுங்கு பாதிப்பு அல்லது பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்று கருதினால் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்யலாம். ஆனால் உதயநிதி ஸ்டாலின் வழக்கைப் பொறுத்தவரை
உச்ச நீதிமன்றம் வழங்கிய 4 வழிகாட்டுதல்களும் பொருந்தாது. இதனால் அவரை கைது செய்ய வேண்டிய சூழ்நிலை இந்த வழக்கிற்கு எழவில்லை. அவரை சட்டப்படி கைது செய்ததே தவறு என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், காலையில் கைது செய்ய வந்தது முதல், அவரை அழைத்துச் செல்லும் நோக்கத்திலேயே அவர்கள் இருந்தனர். நீதிமன்றம் அவரை கைது செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது என்று வக்கீல்கள் தெரிவித்தபோதும், அவரை அழைத்துச் செல்வதிலேயே குறியாக இருந்தனர். குறிப்பாக போலீஸ் வேனிலாவது அவரை ஏற்றி விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். இதுவரை எந்த தலைவர் கைதிற்கும் போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்துக்கு வந்ததில்லை. ஆனால் முதல் முறையாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வந்து, திமுகவினரையும் தாக்கியுள்ளார்.
சில நாட்களாக போலீசார் விதிமுறைகளை மீறி நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவதூறு பேச்சுக்காக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் விடுதலை செய்தது. கரூரில் மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர். சென்னையில் திமுக ஜென் ஸி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரியிலும் போலீசார் ஒரு திமுக பிரமுகரை கைது செய்தனர். இந்த வழக்கில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
குதிரை பேர வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க முடியாது என கூறியதை, சென்னை போலீசார் நாங்கள் செய்கிறோம் என கூறி வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் செந்தில்பாலாஜியை கைது செய்ய முடியாமல் சென்னை போலீஸ் திணறியது. அவர் முன்ஜாமீன் பெற்றார். டாஸ்மாக் முறைகேடு என்று லஞ்ச ஒழிப்புத்துறை செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இவ்வாறு சென்னை மற்றும் மாநில போலீசார் தொடர்ந்து வழக்குகளை அவசர கதியில் போட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல், நீதிமன்றத்தால் குட்டு வாங்கி வருகின்றனர். இது போலீஸ் அதிகாரிகளின் திறமையின்மையா அல்லது அரசு மிரட்டலுக்குப் பயந்து தவறான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்வதால், வழக்கில் கோட்டை விடுகிறார்களா என தெரியவில்லை என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எப்படியோ ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக பேசப்பட்ட போலீசாரின் நிலைமை தற்போது மோசமாகி வருவதாக அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

