திருச்சி செவிலியர் கல்லூரி மாணவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு.செவிலியர் போராட்டம் முடிவு.

உயர்மட்ட குழு விசாரணையை தொடங்கியது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு படிக்கும் செவிலியர் மாணவி சீதாலட்சுமி (வயது 19) என்பவர் மூக்கில் சதை வளர்ச்சி காரணமாக மூச்சுவிட சிரமப்பட்டு,அறுவை சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார். இதற்கு தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி, அவருடைய பெற்றோர் மற்றும் அரசு மருத்துவமனையில் பயிலும் மாணவிகளும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி அரசு பொது மருத்துவமனை எதிரே நேற்று மதியம் நடைபெற்ற திடீர் சாலை மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் மாவட்ட வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய, சென்னையில் இருந்து உயர்மட்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுப் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து, முதற்கட்ட சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையில், மருத்துவக் குழுவினர் செவிலியர் கல்லூரி மாணவிகளையும் இணைத்துக்கொண்டு முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். அப்போது, அறுவை சிகிச்சையில் கவனக்குறைவாகச் செயல்பட்ட மருத்துவரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்; சம்பந்தப்பட்ட மருத்துவர் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாத நிலையில் அரசு செவிலியர் கல்லூரிக்கு 10 நாட்கள் விடுமுறை என நிர்வாகம் திடீரென அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளும், உயிரிழந்த மாணவியின் உறவினர்களும் நேற்று மாலை மீண்டும் அதே இடத்தில் 2-வது கட்டமாகச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட சாலை மறியல் போராட்டமும் கைவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில், மாநகர காவல் ஆணையர் காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர், போராட்டக்காரர்கள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், மறுபுறம் உறவினர்களின் ஒப்புதலோடு உடற்கூறாய்வு நிறைவடைந்தது.
இரண்டு மணி நேர பேச்சுவார்த்தையை முடிவுக்கு வந்த நிலையில், விசாரணை அறிக்கை வரும் வரை 2 நாட்களுக்கு போராட்டத்தை கைவிடுவது என போராட்டகாரர்கள் அறிவித்தனர்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இறுதிச்சடங்கில் மாணவிகள் பங்கேற்கப் பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும்.
அடுத்த மூன்று நாட்களுக்கு மாணவிகள் பணிக்கு செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதேசமயம், மாணவிகள் விடுதியில் தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் சரவணன் உறுதியளித்தார்.
அதனை தொடர்ந்து, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மாணவிகள் முன் வைத்தனர்.
இந்நிலையில் தற்போது மாணவியின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில்உயர்மட்ட குழுவில் உள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் உறுப்பினர்கள் பாரதி மோகன் சண்முகசுந்தரம் ஜெயபிரகாஷ் ஆகியோர் கொண்ட உயர்மட்ட குழுவினர் நேற்று இரவு திருச்சி வந்தனர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று நரசிங் மாணவி எப்படி இறந்தார் என்பது குறித்து தங்களது விசாரணையை தொடங்கினர்.தொடர்ந்து டாக்டரிடம் விசாரணை நடத்தும் குழுவினர் விரைவில் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

