திருச்சி ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி . கர்ப்பத்துக்கு கல்வி நிர்வாகம் உடந்தையா ?
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில், மாணவி ஒருவர் கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

சமயபுரம் டோல்பிளாசா அருகே இயங்கி வரும் ராமகிருஷ்ணா தனியார் பொறியியல் கல்லூரியில் திருச்சி, மண்ணச்சநல்லூர், சமயபுரம் உள்ளிட்ட திருச்சி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததுடன், கல்லூரி விடுதியில் தங்கி கல்வி கற்று வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மாணவியின் உடல் மற்றும் நடத்தை மாற்றங்கள் குறித்து நண்பர்கள் மற்றும் விடுதி ஊழியர்கள் சந்தேகம் எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவி வயிற்று வலி என கூறி சமாளித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் மாணவி யாரிடமும் தெரிவிக்காமல் கல்லூரி கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. பிரசவத்தின் போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கால் மாணவி அலறி உதவி கோரிய நிலையில், அங்கு சென்ற கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவிகள் தாய் மற்றும் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், பிறந்த ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் சமயபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் உயிரிழப்பு சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உடற்கூறு அறிக்கை வந்த பின்னரே குழந்தை பிறக்கும் போதே உயிரிழந்ததா அல்லது வேறு காரணமா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த சம்பவம் ராமகிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் நிர்வாக கண்காணிப்பு குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மாணவி கர்ப்பமாக இருந்தது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கோ, விடுதி நிர்வாகத்திற்கோ எப்படி தெரியாமல் போனது? மாணவர்களின் மனநலம், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக எந்த கண்காணிப்பும் இல்லையா? என்ற கேள்விகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளன. மேலும், மாணவி கர்ப்பமாக காரணமானவர் யார் என்பது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகின்றது கல்லூரி வளாகத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதால், முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க முயன்றபோது, தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பு, விடுதி கண்காணிப்பு, மருத்துவ பரிசோதனை மற்றும் மனநல ஆலோசனை போன்ற அடிப்படை அம்சங்களில் அலட்சியம் காட்டப்பட்டதா என்ற கேள்வி தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

