தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக இப்போதே தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரம்பூரில் 53 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவர், திருச்சி கிழக்கிலும் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இடைத்தேர்தலை மிக முக்கிய அரசியல் போட்டியாக மாற்ற திமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
விஜயை எதிர்த்து கடந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தோல்வியடைந்த நிலையில், இந்த முறை புதிய முகத்தை களமிறக்க திமுக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது . குறிப்பாக, முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை வேட்பாளராக நிறுத்த ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக கருதப்படும் மகேஷ், திருச்சி மாவட்ட அரசியலில் முக்கிய செல்வாக்கு கொண்டவர் என்பதால், அவரை களமிறக்கினால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என திமுக கணக்கிட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளை திருச்சி கிழக்கில் முகாமிட செய்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் மகேஷ் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தாலும், இந்த முறை முழு கட்சியும் களமிறங்கினால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என திமுக நம்பிக்கை கொண்டுள்ளது.
கடந்த 2021 தேர்தலில் மகேஷ் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஒரு சில சூழ்ச்சியால் இங்கு போட்டியிட முடியாமல் போனது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரான மகேஷ் பொய்யாமொழியின் மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிடுவது மிக பெரிய பலமாகும் .
இதேபோன்று அமைச்சரின் சித்தப்பாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பெரியசாமியும் இந்த தொகுதியில் தலைமை அறிவித்தால் போட்டியிட தயார் என கூறியுள்ளார்.இவர் ஏற்கனவே 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் (அப்போது திருச்சி 1) போட்டுயிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு முன் 1999/20 மற்றும் 2001 நடைபெற்ற தேர்தல்களில் திருச்சி இரண்டாவது தொகுதியில் (இப்போதைய திருச்சி மேற்கு) வெற்றி பெற்று திருச்சி மேற்கு தொகுதியை திமுக கோட்டையாக மாற்ற அடித்தளம் அமைத்தவர் அன்பின் பெரியசாமி

