தமிழர் கலை கலாச்சாரம் பண்பாட்டை எடுத்துரைக்க அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க 25 ஆண்டுகளாக இலவச நூலகம் நடத்தும் குடும்பத்தினர்.
சர்வதேசப் புத்தக தினம்

தமிழர் கலை கலாச்சாரம் பண்பாட்டை எடுத்துரைக்க
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க
25 ஆண்டுகளாக
இலவச நூலகம் நடத்தும் குடும்பத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று, தலைமுறைகளுக்கும் கலாச்சாரங்களுக்கும் இடையே ஒரு பாலமாக விளங்கும் புத்தகங்களின் ஆற்றலை அங்கீகரிக்கும் விதமாக, யுனெஸ்கோ உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினத்தைக் கொண்டாடுகிறது.
விதைக்குள் விருட்சம் போல் ஒரு சமூகத்தின் எழுச்சிக்கான கருத்துக்களையே புத்தகங்கள் தங்களுக்குள் கொண்டிருக்க கூடியவை ஆகும். அவ்வகையில்
திருச்சி புத்தூர் பகுதியில் இல்லத்தின் முகப்பு பகுதியிலேயே இலவச நூலகத்தை இருபத்தைந்து ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இதன் தனித்துவம் என்னவென்றால், தனியாக நூலகர் கிடையாது. ஒவ்வொரு மாநகரத்திலும் கண்டிப்பாக மாவட்ட மைய நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம் பகுதி நேர நூலகம் இருக்கும். ஆனால் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில் ஒரு நூலகம் இருந்தால்? அங்கு அனைத்து புத்தகங்களும் இலவசம். இதுவே யோகா ஆசிரியர் விஜயகுமார் கனவாக இருந்தது. திருச்சியில் தனது இல்லத்தில், முகப்பிலேயே இலவச நூலகத்தை துவங்கினார். நூலகத்தில் இணைவதற்கு கட்டணம் கிடையாது. யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து புத்தகம் படிக்கலாம்.
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட நூலகம் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
“புத்தகங்கள் இல்லாத வீடு சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது”
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஐந்தாவது மண்டலம் புத்தூர், பிஷப்குளத் தெருவில் தனது இல்லத்தின் முன்பு இலவச நூலகத்தினை அமைத்துள்ளோம்.
ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என கூறப்படுகிறது.
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”
-திருவள்ளுவர்
அதாவது மண்ணை ஆழமாக தோண்டுகின்ற போது நல்ல நீரானது ஊற்றெடுப்பதை போல நல்ல நூல்களை ஒருவர் வாசிப்பதன் மூலம் அவர்களது அறிவும் பெருகும் என்பது கருத்து.
மனித வாழ்வின் மான்பானது நல்லவற்றை கற்றலும் அதன்படி நிற்றலுமே ஆகும். நல்ல பயனுள்ள நூல்களை கற்பதானது மனிதர்கள் தவறிழைக்காது அவர்கள் வாழும் வகையறிய செய்வதாக அமையும்.
இதனை “புத்தகங்கள் இல்லாத வீடு சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது” என குறிப்பிடுவார்கள். மக்களை மேன்மக்களாக மாற்றுவதில் நூலகங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இதனால் தான் நமது முன்னோர்களான அரசர்கள் தமது நாட்டின் எல்லா பிரதேசங்களிலும் கல்விசாலைகள், நூலகங்கள் போன்றனவற்றை அமைத்தனர்.
நூலகங்கள் கல்வி என்ற பெரும் கடலை தனக்குள் தேக்கி வைத்து, தன்னை தேடி வரும் வாசகர்களின் அறிவு பசியினை போக்கி அவர்களை பண்பட்ட, பக்குவப்பட்ட மனிதர்களாக சமூகத்துக்கு தருகின்றன. பல நூறு நண்பர்களை விட ஒரு நல்ல புத்தகம் மிகச்சிறந்த நண்பன் ஆகும். அவ்வகையில் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகத்தை அமைத்துள்ளோம்.
முன்பு நூலகத்தில் இருந்து புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு செல்லும் வகையில் செயல்படுத்தி வந்தோம். அதில் சிலர் நூல்களை திருப்பி தராத காரணத்தால் படித்து செல்லும் வகையில் நூலகத்தை தற்போது நடத்தி வருகிறோம்.இந்த நூலகத்தை துவங்கியதற்கான காரணம் அனைவருக்கும் கட்டணமின்றி புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்பதே. இதன் மூலம் மக்களை மேலும் பொறுப்புள்ளவர்களாக மாற்ற முயலுகின்றேன். இந்த நூலகத்தில் நூலகர் இல்லை என்பதோடு
எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். நூலகம் பற்றிய செய்தி வாய்வார்த்தையாக பல இடங்களுக்கு பரவியது. பலரும் இந்த நூலகத்திற்கு புத்தகங்களை இலவசமாக கொடுக்க துவங்கினர். மேலும் நூலகத்தை பார்த்துக்கொள்ள ஒருவரை நியமிப்பது சாத்தியமில்லை. மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் கட்டணமில்லாமல் புத்தகம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 25 ஆண்டுகளாக படிபடியாக
ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ள நூலகமாக உருவாக்கி உள்ளோம். நூலகச் செயற்பாடுகளுக்குத் தேவையான வசதிகளும் அவற்றுக்கு ஏற்றாற்போல
பலவகையான நூல்களைச் சேமித்து வைக்க அலமாரி, பயனர்கள் நூல்களை எடுத்து வாசிப்பதற்கான வசதிகள், பயனர்களுக்கு குடி நீர், மின்சார குழல்விளக்கு, மின்விசிறி, ஐந்து இருக்கைகள்
அமைக்கப்பட்டுள்ளன. நூலகத்தில்
கல்விசார் புத்தகங்கள்,
சிறுவர்களுக்கான புத்தகங்கள,
இளைஞர்களுக்கான புத்தகங்கள்,
மகளிர்க்கான புத்தகங்கள்
சட்டம், சமயம், தத்துவம், மருத்துவம், இலக்கியம், புத்தகங்கள்,
சுற்றுச்சூழல்,
உடல் நலம், மன நல புத்தகங்கள் என பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பயனர்கள் பயனடையும் விதமாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
கல்வித்தரம், வயது போன்ற வேறுபாடுகள் இன்றி எல்லாவகையான பயனர்களும் நூலகங்களைப் பயன்படுத்தலாம். நூலகத்தில்
நூல் அடுக்குகள்,நூல் சேமிப்புப் பகுதி,
பயனர் இருக்கைப் பகுதி, சிறப்புப் பயன்பாடுகளுக்கான பகுதி, அச்சு நூல்கள் சேமிப்புப் பகுதி, அச்சல்லாத பிற சேமிப்புகளுக்கான பகுதி, பருவ இதழ்களுக்கான பகுதி என்பன உள்ளன.
சேமிப்புப் பகுதியில் நூல்கள் எடுப்பதற்கு வசதியாக அடுக்குகளில் வைக்கப்பட்டிருக்கும். அடுக்குகள் சுவரோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது நூல்களின் அளவைப் பொறுத்து அடுக்குகள் வரிசை வரிசையாக இருக்கும். ஒவ்வொரு அடுக்கும் பல தட்டுக்களை உடையதாக இருக்கும்.
பயனர்கள் நேரடியாக அடுக்குகளிலிருந்து நூல்களை எடுக்கும் வகையில் அடுக்குகளுக்கு இடையிலான வழி அகலம் கூடியதாகவும், தட்டுக்களின் எண்ணிக்கை ஒரு பயனருக்கு தரையில் நின்றபடி எட்டி எடுக்கக்கூடிய அளவுக்கும் இருக்கும்.
அறிவுக்கு முதலிடம் கொடுத்து அந்த அறிவை, நூல்கள் மூலம் பெற வேண்டும் என தன் வீட்டிலேயே நூலகம் வைத்து தன் வீட்டில் இருப்பவர்களையும் மற்றவர்களையும் நூல்கள் படிக்க தூண்டியதற்கு திருச்சிராப்பள்ளி ரோட்டரி சங்கம் சார்பில் 2014 அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் திருவாளர் புத்தகப் பிரியர் என்ற பட்டம் வழங்கியது.
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வாழும் வீட்டையே நூலகமாக மாற்றிய யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், மகள் கீர்த்தனா விஜயகுமார் சேவை உள்ளத்தை பாராட்டி அவேர்னஸ் அப்பா அம்மா அறக்கட்டளை சார்பில் 2024 அறிவுச்சோலை விருது
வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம், பசிப்பிணி போக்க அனுதினமும் அன்னதானம், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம் அமைத்துள்ளனர். மேலும், உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் மனித நேயப்பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
26 முறை இரத்ததானம் வழங்கி உள்ளார். வாழ்நாளிற்கு பிறகு உடல்தானத்திற்கு உறுதியேற்று திருச்சிராப்பள்ளி கிஆபெ விசுவநாதன் மருத்துவக் கல்லூரியில் உடல்தானத்திற்கு பதிவு செய்து உள்ளார்.
அஷ்டாங்க யோகம், பிராணயாமம், தியானம் உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.இவரது சமூக சேவை மூலம் சமூகத்தில் ஆதரவற்றவர்கள் இறந்தால் ஒவ்வொரு மனிதனும் மதிக்கத்தக்க முறையில் கண்ணியமாக இறுதி மரியாதை செலுத்துவது அவசியம் என செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக மனைவி, மகளுடன் இணைந்து செயல்படுவது வருங்கால சந்ததியினருக்கு பெண்களும் ஆதரவற்ற உரிமை கோரப்படாத உடலுக்கு இறுதி சடங்கு செய்யலாம் என்பதை எடுத்துரைத்து வருகிறார்.
யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் தன்னலமற்ற மனிதாபிமான சேவையினால் குழந்தைகள், ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், சாலை, ரயில் விபத்தில் இறந்தவர்கள்,
தொற்றும், தொற்றாத நோயாளிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் என பெயர் விலாசம் தெரியாத நபர்கள் உடலை சரக காவல்துறை காவலர்கள் முன்னிலையில் இடுகாட்டில் உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வருகிறார். இவரது தன்னலமற்ற மனித நேயப் பணியைப் பாராட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் 2023 சுதந்திர தின விழாவில் நற்சான்றிதழும்,
25 ஜனவரி 2023
சூரியனார் கோவில் ஆதீனம் குரு மகா சன்னிதானம் சிறந்த மனிதநேய விருதும்,
22 மே 2025 திருவாடுதுறை ஆதீனம் இருபத்து நான்காவது குருமகா சந்நிதானம் மனிதநேய மாமணி விருதும்,
26 ஜனவரி 2026 தமிழ்நாடு ஆளுநர் விருது தனிநபர் பிரிவில் விருதும் பெற்றுள்ளார்
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகத்தில் புத்தக சேகரிப்பு, நூற்பட்டியல், நூல் பாதுகாப்பு உள்ளிட்ட செயல்பாடுகளிலிருந்து நூல்களை எண்ணிமமாக்குதல், பொது ஆய்வுரைகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், ஆராய்ச்சிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

