Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உயிர் பலி ஏற்படுத்தும் அவல நிலையில் மேலப்புதூர் சுரங்கப்பாலம்.திருச்சி கலெக்டர் நடவடிக்கை மகேஸ்வரி வையாபுரி வேண்டுகோள்.

0

'- Advertisement -

திருச்சியில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மேலப்புதூர் சுரங்கப்பாலம்

 

திருச்சி கலெக்டர் நடவடிக்கை மகேஸ்வரி வையாபுரி வேண்டுகோள்.

 

திருச்சி மேலப்புதூர்- பாலக்கரை வேர்ஹவுஸ் இடையில் சுரங்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது திருச்சி-கரூர்-கோவை வழித்தடத்திலான ரயில் பாதையை வாகனங்கள் கடந்து சென்று வருவதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகரின் அடையாளமாகவும், போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த சுரங்க பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

எனினும் இதில் பராமரிப்பு பணிகளை மட்டும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதோடு இந்த சுரங்க பாலத்தை மேல்புறமாக கடந்து செல்லும் ரெயில் பாதை ரெயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இப்படி மூன்று துறைகளில் கட்டுப்பாட்டில் இந்த சுரங்க பாலம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஆனால் நெடுஞ்சாலை துறை நிர்வாகம் இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகளில் அவ்வப்போது ஏற்படும் குறைபாடுகளையும், மழைநீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்ய மும்முரம் காட்டாமல் அலட்சியமாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து உபயோகிப்பாளர் உரிமை இயக்க பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கூறும் பொழுது

 

வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த சுரங்க பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அமைத்துள்ளது. இதில் இருபுறமும் மழை நீர் ஓடுவதற்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் மேல் மூடிகள் உடைந்து பல மாத ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதை நெடுஞ்சாலைத்துறை சரி செய்யவில்லை.

கால்வாய் பக்கவாட்டிலும் சுவர் இல்லை. இதனால் இருசக்கர வாகனம், ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி பள்ளத்துக்குள்

விழுந்து உயிர்பலி ஏற்படும் அவல நிலை உள்ளது.

 

அதேபோல் இந்த பகுதியில் பல பெண்கள் பள்ளிகள் அமைந்துள்ளது. சுரங்க பாலத்தின் நடுவில் இருபுறமும் பாதசாரிகள் சென்று வரும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.இதன் வழியாக காலை, மாலை நேரங்களில் மாணவிகள் இந்த படிக்கட்டுகள் வழியாக சாலையை கடந்து செல்கிறார்கள். அதேபோல் ஆட்டோக்களில் வரும் மாணவிகளும் இந்த படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி ஆட்டோவில் ஏறி செல்கின்றனர். மேல்புறச்சாலை ஒரு வழி பாதையாக இருப்பதால் ஆட்டோக்கள் பாலத்தின் மையப்பகுதியில் நிறுத்தி மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்.

ஆனால் இந்த பகுதி மாணவிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கால்வாய் சுமார் 4 அடி ஆழத்திற்கு திறந்து கிடக்கிறது. சிறிய மழை பெய்தாலே இந்த கால்வாய் நிரம்பி விடும் கால்வாய் இருப்பதை வெளியில் தெரியாத அளவுக்கு மழை நீர் தேங்கும்.

மேல்மூடி இல்லாமல் திறந்து கிடப்பதால் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள் கால்வாயில் குவிந்து கிடக்கிறது. சமீபத்தில் இந்த சுரங்கப்பாலத்தின் மேல் புறத்தில் செல்லும் ரெயில் பாதையை ரெயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்தது.

இதன் மூலம் ஏற்பட்ட இடிப்பாடுகள் பாலத்தின் மையப்பகுதியிலேயே கிடக்கிறது. நெடுஞ்சாலை துறை இதை அகற்றவில்லை. அதேபோல் இந்த பாலத்தின் நடுப்பகுதியில் டிவைடர் எனப்படக்கூடிய மைய சுவரை நெடுஞ்சாலைத்துறை கட்டியது. கட்டி சில நாட்களிலேயே தற்போது சிதலமடைந்து அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்கு சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து உள்ளது.

தரமற்ற முறையில் இவை அமைக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது . இதையும் தமிழக அரசு கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்.

மேலும் திருச்சி மாநகரக்குள் உள்ள நெடுஞ்சாலை துறை சாலைகளை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்தால்தான் உடனுக்குடன் பராமரிப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள முடியும். இல்லையென்றால் சிறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கூட நெடுஞ்சாலை துறையின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அதோடு இந்த பாலத்தை கடந்து செல்லும் ரெயில்களின் கழிவறை கழிவுகள், கழிவுநீர் போன்றவை பாலத்தில் கொட்டுகிறது. இது பாலத்தின் கீழ் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது விழுகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் ரெயில்கள் கடக்கும்போது பாலத்தின் ஓரமாக வாகனத்தை நிறுத்திக் கொள்கிறார்கள்.

அந்த சமயங்களில் பின்னால் வரும் கனரக வாகனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்துகளை ஏற்படுத்தும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. ஆகவே ரெயில்வே நிர்வாகம் ரெயில் கழிப்பிடங்களில் இருந்தும் கொட்டும் கழிவு நீரை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூன்று துறைகள் சங்கமிக்கும் இந்த சுரங்கப்பாலத்தில் உள்ள குறைபாடுகளை களைய திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.