
தமிழகப் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு மிக முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வரும் 2026-2027ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு முழு விடுமுறை அளித்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பள்ளி நாள்காட்டியைப் பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டுள்ளது.
வேலை நாட்கள் மற்றும் விடுமுறை விவரங்கள்:
புதிய கல்வி நாள்காட்டியின்படி, இந்த ஆண்டு ஒட்டுமொத்த பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை 220 நாட்களிலிருந்து 210 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 365 நாட்களில் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது. இதில் 22 நாட்கள் அரசுப் பொது விடுமுறை நாட்களாகும்.

இந்த கல்வி ஆண்டின் மொத்த சனிக்கிழமைகளில் ஜூலை 19, செப்டம்பர் 19, மற்றும் டிசம்பர் 3 ஆகிய மூன்று சனிக்கிழமைகள் மட்டுமே விதிவிலக்காகப் பள்ளி வேலை நாட்களாகச் செயல்படும். மற்ற அனைத்து சனிக்கிழமைகளும் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களாகும்.
காலாண்டுத் தேர்வு: 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குச் செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 25 வரை தேர்வுகள் நடைபெறும். தொடர்ந்து செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்படும்.
அரையாண்டுத் தேர்வு: டிசம்பர் 16 முதல் டிசம்பர் 23 வரை நடத்தப்பட்டு, டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை விடுமுறை விடப்படும். ஜனவரி 4 அன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
கோடை விடுமுறை: இந்த 2026-2027 கல்வியாண்டின் கடைசி வேலை நாள் 2027 ஏப்ரல் 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 24 முதல் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை தொடங்குகிறது.
இந்த ஆண்டு பல முக்கியப் பண்டிகைகள் வார இறுதி நாட்களை ஒட்டி வருவதால் மாணவர்களுக்குப் பலமுறை தொடர் விடுமுறை வாய்ப்புகள் அமைகின்றன. செப்டம்பர் 4 (வெள்ளி) கிருஷ்ண ஜெயந்தி மற்றும் செப்டம்பர் 14 (திங்கள்) விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தலா 3 நாட்கள் தொடர் விடுமுறையும், அக்டோபர் 19, 20 தேதிகளில் வரும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை ஒட்டி (சனி, ஞாயிறுடன் சேர்த்து) 4 நாட்கள் மகா தொடர் விடுமுறையும் கிடைக்கிறது. ஜனவரி 15 முதல் 17 வரை பொங்கல் பண்டிகைக்கும் 3 நாட்கள் விடுமுறை உண்டு. இருப்பினும், நவம்பர் 8 தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் கூடுதலாக விடுமுறை இல்லை.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் பின்னர் தனியாக அறிவிக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

