திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், காயமடைந்த 8-ஆம் வகுப்பு மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரவணன் என்பவரது மகன் செல்வம் (வயது 13). இவர் கரட்டாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும், நல்லவாணிப்பட்டியில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் வாலிபால் விளையாடச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த நடுவலூர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் பாரதி என்பவருக்கும் செல்வத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், சக மாணவர்கள் அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
வீடு திரும்பிய செல்வத்தின் நெற்றியில் வீக்கம் இருப்பதை கண்ட பெற்றோர், விசாரித்தபோது வாலிபால் விளையாட்டின் போது ஏற்பட்ட மோதலில் அடிபட்டதாகக் கூறியுள்ளார். சிறிய காயம் எனக் கருதி இருந்த நிலையில், சுமார் இரண்டு மணி நேரம் கழித்து செல்வம் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரைத் துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் குப்புராஜ், மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். நிகழ்விடத்திற்கு விரைந்த துறையூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் கதிரவன், விசாரணை மேற்கொண்டு வருகிறார். விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட மோதலின்போது தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மாணவன் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்டமாகக் கருதப்படுகிறது. மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும். பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செல்வத்தின் உடலை கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, செல்வத்தை தாக்கிய 9-ஆம் வகுப்பு மாணவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார் .

