Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு புதிய பொறுப்பு வழங்கி கௌரவித்துள்ள எடப்பாடி .

0

'- Advertisement -

அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளாராக இருந்து வந்த வெல்லமண்டி நடராஜன், ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் திமுகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணைவார் என எதிபார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்த வெல்லமண்டி நடராஜன் 2016 – 2021 அதிமுக ஆட்சிக்காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற அவர் அவரது மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரும்பி ஓபிஎஸ் பக்கம் நின்றார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரிந்த தலைவர்கள் மூலம் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார். ஆனால், அந்த கோரிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் நிராகரித்தனர்.

இதனிடையே, ஓபிஎஸ் தனி கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலை அவர் மறுத்ததை அடுத்து அவருடன் இருந்த முக்கிய புள்ளிகள், ஆதரவாளர்கள் என பலரும் விலகி திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தனித்துவிடப்பட்டதாகக் கருதப்பட்டது.

ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் திமுக பக்கம் சென்றனர்,செங்கோட்டையன் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் அண்மையில் திமுகவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அதிமுகவில் மீண்டும் ஐக்கியம் ஆனார்.

தொடக்கம் முதலே அதிமுகவில் பணியாற்றி வருபவர் வெல்லமண்டி நடராஜன். திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவராக இருந்தார். பின்னர் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தார். 2016 ஆம் ஆண்டு திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தன் மகனுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என வெல்லமண்டி நடராஜன் பலமுறை கட்சித் தலைமையை நாடினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு பச்சைக்கொடி காட்டவில்லை. வெல்லமண்டி நடராஜனுக்கு மட்டும் சீட் வழங்கப்பட்டது. எனினும், அவர் 2021 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தார்.

2022ல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்ததால் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசமியால் நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டு வந்தார். ஓபிஎஸ் அணியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகச் செயல்பட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்த நிலையில், மீண்டும் அதிமுகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன். அதிமுகவில் மீண்டும் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி உள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியில் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது அதிமுக தொண்டர்கள் இடைய பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.