Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.திருச்சியில் நடைபெற உள்ள மாநில மாநாடு திடலை ஆய்வு செய்தார் அமைச்சர் கே.என். நேரு.

0

'- Advertisement -

திருச்சி என்றாலே அரசியல் தலைவர்களுக்கு நினைவுக்கு வருவது மாநாடு தான். எந்த ஒரு மாநாடு நடத்தினாலும் திருச்சியில் நடத்தினால் அது திருப்புமுனை வெற்றி மாநாடாக அமையும், என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நம்பிதிருச்சியில் பல மாநாடுகளை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் தற்போது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அரியணை ஏற வேண்டும் என்ற நோக்கில் திருச்சியில் மீண்டும் மாபெரும் மாநாடு திமுக சார்பில் வருகின்ற மார்ச் எட்டாம் தேதி நடைபெற உள்ளது.

 

மேலும் திருச்சி தமிழகத்தின் மையப் பகுதியாக இருப்பதால் மாநாடு நடத்தினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் எளிதாக வந்து செல்லவும், போக்குவரத்து வசதியும் சுலபமாக இருக்கும் என்று திருச்சியில் மாநாட்டை அரசியல் கட்சியினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர்.

பெரிய கட்சி என்றாலும் சின்ன கட்சி என்றாலும் திருச்சியில் மாநாடு நடத்தாத கட்சியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அரசியல் கட்சியினர் திருச்சியில் மாநாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக 5 ஆண்டுக்கு ஒரு முறை வரும் சட்டமன்ற தேர்தலுக்கு திருச்சியில் மாநாடு நடத்தி தங்களது பலத்தை நிரூபித்து சீட்டு பெறுவது காலம் காலமாக நடந்து வருகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மார்ச் 8-ந் தேதி ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திருச்சியில் தி.மு.க மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திருச்சியில் மாநாடு கூட்டினால் தி.மு.க-வுக்கு திருப்புமுனையாக அமையும் என்பது அண்ணா, கருணாநிதி காலம் தொட்டே இருக்கும் நம்பிக்கை ஆகும். 1956 மே மாதம், திருச்சியில் நடைபெற்ற தி.மு.க-வின் 2-வது மாநில மாநாட்டில் தான் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேர்தல் களத்துக்குள் அடியெடுத்து வைத்தது தி.மு.க. அதுதான் திமுக வரலாற்றில் முதல் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பின், 6-வது மாநில மாநாடு 1990-லும், 8-வது மாநில மாநாடு 1996-லும், 9-வது மாநில மாநாடு 2006-லும், 10-வது மாநில மாநாடு 2014-லும், 11-வது மாநில மாநாடு 2021-லும் திருச்சியில் தான் நடைபெற்றது.

 

1990-ம் ஆண்டில் 6-வது, 2014-ம் ஆண்டில் 10-வது மாநில மாநாடுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மட்டும் தி.மு.க வெற்றி பெறவில்லை. மற்ற மாநாடுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக-வே வெற்றி பெற்றதால், திருச்சியில் மாநாடு கூட்டினால் திமுக-வுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது அக்கட்சியினரின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில், தற்போது தி.மு.க-வின் 12-வது மாநில மாநாடு வரும் மார்ச் 8-ந் தேதி திருச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாகவே திருச்சி மாநாட்டை தி.மு.க அறிவித்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரம்மாண்ட மாநில மாநாடு மார்ச் 8-ந் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற தலைப்பில் மாநாடு மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். தற்போது இதற்கான பிரம்மாண்ட மேடை பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் பகுதியில் பரந்து விரிந்த பரப்பளவில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் இரவும் பகலாக நடைபெற்று வருகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்வதற்கான முக்கியத் தீர்மானங்கள் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தின் ‘சென்டிமென்ட்’ வெற்றியை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், நிர்வாகிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளைத் தலைமை வழங்கியுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் திரள உள்ளதால், அவர்களுக்கான உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுப்பதில் அமைச்சர் கே.என் நேரு மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில், மாநாட்டு திடலை தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று திங்கட்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டார். மேலும் நிர்வாகிகளிடம் பணிகளை முழு வீச்சில் விரைந்து நடத்தி முடிக்கவும் அமைச்சர் கே.என்.நேரு. உத்தரவிட்டுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.