விராலிமலை : எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து தனியாக அரசியல் செய்யும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சுமார் 80 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொங்கல் பரிசுத் தொகுப்பை கொடுத்து வருவது தெரிய வந்துள்ளது.
ரூ.1000 மதிப்பிலான ஒரு பொங்கல் பானை, கரண்டி, கிண்ணம், பொங்கல் சாமான்களை விஜயபாஸ்கர் விநியோகித்து வருகிறார். அதில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் கூட இடம்பெறாதது சர்ச்சையாகி இருக்கிறது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரமும், பொங்கல் சாமான்களை அடங்கிய தொகுப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால், ஒவ்வொரு தொகுதியிலும் பொங்கல் பரிசுப்பொருட்களை பலரும் விநியோகித்து வருகின்றனர்.
அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதியில் பொங்கல் பரிசுப் பொருட்களை விநியோகித்து வருகிறார். திருச்சி மேற்கு தொகுதியில் உள்ள 23 வார்டிகளிலும் இந்த பரிசுப் பொருட்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக அவரது ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக தரப்பிலும் பொங்கல் பரிசு அரசியல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
விராலிமலை தொகுதியின் சிட்டிங் சட்டமன்ற உறுப்பின விஜயபாஸ்கர் மொத்தமாக 80 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசை விநியோகிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். பொங்கல் பானை, கிண்ணம், கரண்டி, பொங்கல் சாமான், கண்ணாடி வளையல் உள்ளிட்டவை அடங்கிய ரூ.1000 மதிப்பிலான பொங்கல் பரிசை விஜயபாஸ்கர் விநியோகிக்க தொடங்கி இருக்கிறார்.
அதிலும் ஒரே வீட்டில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் இருந்தாலும், ஒரு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பொங்கல் பரிசுத் தொகுப்பு பைகளில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறவில்லை என்ற சர்ச்சயும் எழுந்துள்ளது. இதனால் அதிமுகவினர் பலரும் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இல்லாததால் புலம்ப தொடங்கி இருக்கின்றனர். விஜயபாஸ்கர் தனியாக அரசியல் செய்வதாகவும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

