Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வீட்டில் கொடிய விஷம் உள்ள நாகப்பாம்பை வளர்த்தவர் கைது.வன அலுவலர்கள் பாம்பை பறிமுதல் செய்தனர் .

0

திருப்புல்லாணி அருகே நாகப்பாம்பை கூண்டில் அடைத்து வைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள அரசு உடற்பயிற்சி கூடத்தில், அக்கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 48) என்பவர் நாகப்பாம்பு ஒன்றினை கூண்டில் அடைத்து வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் நித்திய கல்யாணி தலைமையிலான வனத்துறை பணியாளர்கள் நேரில் சென்று உடற்பயிற்சி கூடத்தினை சோதனையிட்டனர். அப்போது அங்கு 4 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு ஒன்றினை கூண்டில் அடைத்து வைத்து இருப்பதை கண்டறிந்து ராஜேந்திரனை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்பு வனத்துறை அலுவலர்கள் நடத்திய விசாரணையில் அவர் கூண்டில் நாகப்பாம்பு வளர்த்து வந்தது தெரிய வந்தது.

மேலும், நாக பாம்பினையும் கூண்டோடு பறிமுதல் செய்து ராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா உத்தரவின் பேரில் ராஜேந்திரனை கைது செய்து, ராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவர் உத்தரவின்பேரில், ராஜேந்திரன் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

மேலும் கூண்டோடு மீட்கப்பட்ட நாகப்பாம்பினை ராமநாதபுரம் பெரியகண்மாய் காட்டுப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

இதுபோன்று வன உயிரினங்களைப் பிடித்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி தண்டனைக்குறிய குற்றமாகும். இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை வனத்துறை மூலம் எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.

இதுபோன்ற வன உயிரினங்களைப் பிடித்து பொதுமக்கள் வாழும் பகுதியில் வைத்திருப்பது வன உயிரினங்களின் உயிருக்கு ஆபத்தாக அமைவதோடு இல்லாமல், பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து விளைவிப்பதாகும். மேலும் நாகப்பாம்பானது, வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி அட்டவணை 1-ல் அட்டவணைப்படுத்தப்பட்டு உச்சபட்ச பாதுகாப்பை பெறும் வன உயிரினமாகும் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.