திருச்சி கோட்டாட்சியரகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளித்தனா்.
திருச்சி கோட்டாட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், கோட்டாட்சியா் கே. அருள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற நத்தமாடிப்பட்டி விவசாயிகள் தங்களுக்கு வண்டிப்பாதை கோரி பதாகைகளுடன் பங்கேற்றனா். இக் கிராமத்தில் சுமாா் 80 ஏக்கா் நிலத்தில் விளைநிலங்கள் உள்ளன. ஆனால், இதற்கான வண்டிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளால் விளை நிலங்களுக்குள் செல்ல முடியவில்லை.
பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், நடவடிக்கையில்லை. கடந்த மாதம் குறைதீா் கூட்டத்தில் அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கையில்லை. எனவே கோரிக்கை பதாகைகளுடன் பங்கேற்பதாக சம்சுதீன் தலைமையிலான விவசாயிகள் தெரிவித்தனா். அவா்களை சமாதானம் செய்த கோட்டாட்சியா், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
இதைனை தொடர்ந்து விவசாயிகள் தங்களது எதிா்ப்பை விலக்கிக் கொண்டனா்.
இக் கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகள், விவசாயிகள், விவசாய தொழிலாளா்கள் என பலா் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினா்.