தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி. உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு,
திருச்சி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வருகிறது சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனை. இந்த மருத்துவமனை காந்திஜி நகரில் டாக்டர் முரளிதரன் என்பவருக்கு சொந்தமானது.
இந்த மருத்துவமனை தரைத்தளம் மற்றும் 4 மாடிகளை கொண்டது. இந்த மருத்துவமனையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், நேற்று டிசம்பர் 12ம் தேதி இரவு 9 மணிக்கு மருத்துவமனையின் தரைத்தளத்தில் வரவேற்பு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் கிளம்பியது.
பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். அத்துடன் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ 4 தளங்களுக்கும் பரவியது.
தீ விபத்தினால் ஏற்பட்ட புகைமூட்டத்தினால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவர்கள் என அனைவரும் மூச்சுத் திணறலில் சிக்கிக் கொண்டனர். வெளியேற முயற்சித்தும் முடியவில்லை.
தொடர் போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் சிக்கிக்கொண்ட 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மற்ற மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தின் போது லிப்டில் வந்த 3 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை லிப்டில் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புத் துறையினர் லிப்ட்டை போராடி உடைத்தும் பலனின்றி மூச்சுத்திணறலால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.