
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வி (வயது 50) என்பவரது இரண்டாவது மகன் வெங்கடேசன்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து தாய் செல்வியுடன் வாழ்ந்து வந்துள்ளார். பெற்றோர் தங்கள் சொத்தை மற்ற இரண்டு சகோதரர்களுக்கு மட்டும் பிரித்துக் கொடுத்ததாகக் கூறி, தனக்கும் சொத்தில் பங்கு கேட்டு வெங்கடேசன் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த வெங்கடேசன் மீண்டும் தாயிடம் சொத்தைப் பிரித்துக் தருமாறு தகராறு செய்துள்ளார். அதற்கு செல்வி, “நீ வேலைக்குச் செல்லாமல் எப்போதும் குடித்துவிட்டு இருப்பதால் உனக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுக்க முடியாது” எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த உடற்பயிற்சி டம்பல்ஸால் தாயின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் செல்வியின் மூளை சிதறும் அளவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.படுகாயமடைந்த செல்வியை உறவினர்கள் உடனடியாக மீட்டுத் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மணப்பாறை காவல் நிலைய போலீசார், வெங்கடேசனைக் கைது செய்தனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், பெற்ற தாயையே மகன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

