

திருச்சி முதலியார் சத்திரம் டாஸ்மாக் கடையில் இரு தரப்பினர் பயங்கர மோதல்
ரவுடிக்கு கத்திக்குத்து.
வாலிபர்கள் மீது கல்லால் தாக்குதல்

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணிகண்டன் (வயது 26 )இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் ரவுடி பட்டியலில் உள்ளார்.
பாலக்கரை கெம்ஸ் டவுன் செபஸ்தியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்பு என்கிற ரூபன் ( வயது 35 ) இவர்கள் இருவரும் முதலியார்சத்திரம் காஜா பேட்டை பகுதியில் உள்ள மதுக்கடையில் தனித்தனியாக மது அருந்தி உள்ளனர். மது அருந்திவிட்டு வெளியே வரும்போது மணிகண்டனுக்கும் அப்பு என்கிற ரூபனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பு என்கிற ரூபன், அவருடைய நண்பர் நெல்சன் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனின் கையில் கத்தியால் குத்தி கிழித்து உள்ளனர். இதில் காயமடைந்த மணிகண்டன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல் மணிகண்டனும், அவரது நண்பர் நிர்மலும் அப்பு என்கிற ரூபனையும், நெல்சனையும் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினரும் இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . புகாரின் பேரில் சப்.இன்ஸ்பெக்டர் அலாவுதீன் இருதரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
டாஸ்மாக் கடையில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

