Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாஜக சார்பில் தொழிலதிபர் முருகானந்தம் போட்டி? 25 ஆண்டுக்குப் பின் திருச்சியில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு.

0

'- Advertisement -

 

வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருச்சியில் பாஜக சார்பில் தொழிலதிபர் முருகானந்தம் போட்டியிட வாய்ப்பு.

மத்தியில் பா.ஜ.க.வை 2-வது முறையாக ஆட்சிக்கு கொண்டு வந்ததில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் பங்கு உள்ளது.
அப்பழுக்கற்ற நிர்வாகம், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், விவசாயிகளின் துயர் துடைக்கும் கிஷான் திட்டம் போன்ற உன்னத திட்டங்கள் பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

மாநிலங்கள் தோறும் கட்சியிலும் ஆட்சியிலும், நேர்மையான, திறமையான புதியவர்களை கொண்டு வந்து அனைத்து தரப்பினரையும் தம் பக்கம் ஈர்த்து வருகின்றனர். மேலும் பிராந்திய வாரியாக மக்களின் நாடித்துடிப்புகளை அறிந்து கொண்டு அதன் மூத்த தலைவர்கள் கையாளும் தேர்தல் யுக்திகள் எதிர்க்கட்சிகளை கலங்கடிக்கவே செய்கின்றன.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் அக்கட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பட்டி தொட்டி எங்கும் மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை தெருமுனைப் பிரச்சாரங்கள் மூலம் மக்களிடம் பட்டியலிடப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க பா.ஜ.க.வை ஒரு கை பார்த்து விட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. தேசிய அளவில் ஒன்றிரண்டு கூட்டங்களையும் நடத்திவிட்டனர்.
ஆனால் யார்? பிரதமர் வேட்பாளர் என்பதை அவர்களால் இறுதி செய்ய இயலவில்லை. பாஜகவோ அடுத்த முறையும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்பதை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அதிரடியான செயல்பாடு, திட்டங்கள் அக்கட்சியினரை உற்சாகத்தில் வைத்திருக்கிறது.
மக்களும் அவரது செயல்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது தேர்தல் களத்தில் நிச்சயம் தங்களுக்கு நல்லபலன் கொடுக்கும் என பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் நம்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக உயர் மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.

நாகர்கோவில்,
ராமநாதபுரம் கோவை, திருச்சி, போன்ற தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளை பெறுவதில் கட்சியின் தலைமை உறுதியாக உள்ளது.
இந்த தொகுதிகளில் போட்டியிட திறமையான, ஆளுங்கட்சிக்கு அனைத்து வகையிலும் ஈடு கொடுக்கும் நபர்களை பாஜக அடையாளம் கண்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தகுதியான நபரை அக்கட்சி இறுதிச் செய்துள்ளதாக விவரம் தெரிந்தவர்கள் கூறினர்.

இந்த தொகுதியை பொருத்தமட்டில் 1998-ல் பா.ஜ.க. முதல் முதலாக வெற்றிக் கனியை பறித்தது.
அப்போது எம்.பி. யாக தேர்வு செய்யப்பட்ட அரங்கராஜன் குமாரமங்கலம் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் திருச்சி மக்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளது.
ஆகவே சுமார் கால் நூற்றாண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திருச்சியில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்பதில் அக்கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

பலம் பொருந்திய தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவரை பாராளுமன்றத் தேர்தலில் களம் இறக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றன.
கடந்த சட்டசபை தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் களமிறங்கிய எக்ஸெல் குழுமங்களின் தலைவர் முருகானந்தம் பாஜக சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்க அடித்தளமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார்.
முன்பு கமலஹாசனின் வலது கரமாக செயல்பட்டு வந்தார் என்பதை நாடறியும்.
இளம் தொழிலதிபரான முருகானந்தம் குறுகிய காலத்தில் தேர்தல் களத்துக்கு வந்து பம்பரமாக சுழன்று சுழன்று வாக்கு சேகரித்த விதம், திருவெறும்பூர் சட்டமன்றத் சட்டசபை தொகுதி மட்டும் இல்லாமல் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.

இருப்பினும் அவர் தேர்ந்தெடுத்த கட்சியின் அடித்தளம் பலவீனமாக இருந்ததால் வெற்றியை ருசிக்க முடியவில்லை. மேலும் தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக எடுக்கப்பட்ட கூட்டணி முடிவுகள் முருகானந்தம் போன்ற திறமைசாலிகளை அதிர்ச்சி அடையச் செய்தது.
ஆகவே தேர்தல் முடிந்த கையோடு அந்த இயக்கத்துக்கும் முருகானந்தம் விடை கொடுத்து விட்டார்.

ஆனால் தேர்தல் களத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு இணையாக ஜொலித்தார் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

ஏழை எளிய மக்களின் பால் அன்பு கொண்டுள்ள அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது தாயாரின் நினைவாக பெரும் பொருள் உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்து வருகின்றார்.
மேலும் எப்போதும் உதவி என்று யார் கேட்டாலும் தயங்காமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இது போன்ற மனிதநேய செயல்களையே இன்றைய வாக்காளர்களும் விரும்புகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி மீது அளவற்ற ஈர்ப்பும், நம்பிக்கையும் வைத்துள்ள முருகானந்தம் தனக்கு பாஜகவில் திருச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் வெற்றி பெறும் வழி வகைகள் குறித்து மூத்த அரசியல் நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

வரும் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன், அல்லது என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செப்டம்பர் 10ஆம் தேதி திருச்சி வரும் நாளில் அவரது முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமாகி தொகுதியைக் கைப்பற்றி விடுவார் என நம்பப்படுகிறது.

தொழிலதிபர் முருகானந்தத்துடன் நெருங்கிய நண்பர்களும் அதனை உறுதி செய்தனர். மேலும் அவர்கள் கூறும் போது,
கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம் முழுவதும் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக எக்ஸெல் குழுமங்களின் தலைவர் முருகானந்தம் பேசப்பட்டார்.
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தற்போது அண்ணாமலையின் தலைமையில் வலுவாக வளர்ந்து வருகிறது.
இந்நிலையில் நடைபெற உள பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியை ஆட்டம் காண வைக்கும் அனைத்து யுக்திகளையும் கையாள இருக்கிறது பாஜக.
அவ்வாறான சூழலில் தொலைநோக்கு சிந்தனை, அர்ப்பணிப்பு, நேர்த்தியான அணுகு முறையுடன் சர்வதேச அளவில் பல்வேறு தொழில்களில் முத்திரை பதித்துள்ள முருகானந்தத்துக்கு பாஜக நிச்சயம் வாய்ப்பு வழங்கும்.
அவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டால் கூட்டணி கட்சிகளுடன் கரம் கோர்த்து சுலபமாக வெற்றி பெற்று விடுவார் என்றனர்.
முருகானந்தம் போன்ற நல்ல சமுதாய அக்கறை உள்ள மனிதர் வெற்றி பெற்றால் அரங்கராஜன் குமாரமங்கலம் திருச்சிக்கு பல நல திட்டங்களை கொண்டு வந்தது போல் முருகானந்தமும் திருச்சிக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து திருச்சி மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபடுவார் என்பது உறுதி.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.