Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷின் சொந்த தொகுதியிலேயே திருப்பராய்த்துறை கோயில் நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் ரூ.500 கோடி மெகா மோசடி,பூஜை கூட நடத்த முடியாமல் இருளில் மூழ்கியுள்ள கோயில் நிர்வாகம் ,கோர்ட் உத்தரவுக்கு பிறகாவது நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் ரமேஷ் ?

0

'- Advertisement -

திருச்சி திருப்பராய்த்துறை கோயில் நிலங்கள் மெகா மோசடி: ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஆக்கிரமித்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிரடித் தடை!

 

Ad banner

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருப்பராய்த்துறையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன அல்லது ஆக்கிரமித்து செய்யப்பட்டு கோயிலுக்கு அடிமனை வாடகை செலுத்தப்படாமல் உள்ளன. மெகா ஊழல் விவகாரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கின் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் பல ஆண்டுகளாக அரங்கேறியுள்ள இந்த பகல் கொள்ளை, பொதுமக்களிடையேயும் பக்தர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வரலாற்று ஆவணங்களை மறைத்து அரங்கேறிய மோசடி

கி.பி. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தாருகாவனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமாக திருப்பராய்த்துறை மற்றும் அந்தநல்லூர் கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. கடந்த 1927-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் பதிவு செய்யப்பட்ட ரீ-செட்டில்மென்ட் (Re-settlement) பதிவேட்டின்படி, இந்த நிலங்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி ‘கோயிலுக்குச் சொந்தமானவை’ என மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

ஆனால், சுமார் 1942-ஆம் ஆண்டு வாக்கில் திருப்பராய்த்துறைப் பகுதிக்கு வந்த ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் (வழக்கின் 8-வது எதிர்மனுதாரர்), கோயில் நிர்வாகத்திடம் எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் பெறாமல் கோயில் நிலங்களைச் சிறுகச் சிறுக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் பிரிவு 34-இன் படி, கோயில் நிலங்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ முறையான அரசின் அனுமதி தேவை என்ற நிலையில், அவை அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் நேரடித் துணையோடு, திருப்பராய்த்துறை கிராமத்தில் சுமார் 14.08 ஏக்கர் நிலங்களும், அந்தநல்லூர் கிராமத்தில் சுமார் 44 ஏக்கர் நிலங்களும் போலி ஆவணங்கள் மூலம் தபோவனத்தின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்றைய சந்தை மதிப்பில் இந்த நிலங்களின் மொத்த மதிப்பு 500 கோடி ரூபாயைத் தாண்டும் என அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏழைகளுக்கு ஒரு நீதி; பெருமுதலாளிகளுக்கு ஒரு நீதியா?

இந்த விவகாரத்தில் அரசுத்துறைகள் செயல்பட்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கோயிலுக்குச் சொந்தமான வேறு சில இடங்களில் சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு, மின்சாரம், குடிநீர், சாலை வசதி போன்ற எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தர மறுத்து வரும் பஞ்சாயத்து மற்றும் மின்சார வாரிய நிர்வாகங்கள், ஆக்கிரமிப்பு செய்துள்ள தபோவனத்திற்கு மட்டும் சிவப்புக் கம்பளம் விரித்துள்ளன.

சட்டத்துக்குப் புறம்பாக திருக்கோயிலின் தடையின்மைச் சான்று (NOC) இன்றி தபோவனத்திற்கு மின்சார வாரியம் பல மின் இணைப்புகளை வழங்கியுள்ளது. பஞ்சாயத்து நிர்வாகம் தனது நிதியிலிருந்து தெருவிளக்குகள் அமைத்து, தார் சாலைகளையும் போட்டுக் கொடுத்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அனுபவித்து வரும் இந்த நிறுவனம், இன்றுவரை திருப்பராய்த்துறை ஊராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட எவ்வித வரிகளையும் செலுத்தாமல் உள்ளூர் நிர்வாகத்திற்கும் பெருத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறநிலைத்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே ஊழல்: அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

இந்த மாபெரும் நிலமோசடி நடந்திருப்பது வேறு எங்குமல்ல, தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், திருச்சி மாவட்டப் பொறுப்பு அமைச்சரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினருமான ரமேஷ் அவர்களின் சொந்தத் தொகுதியில் தான். அதிகாரிகளின் துணையின்றி இவ்வளவு பெரிய ஊழல் சாத்தியமில்லை என்பதால், இதற்குத் துணைபோன ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது அமைச்சர் ரமேஷ் நேரடியாகத் தலையிட்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே எழுந்துள்ளது.

 

நிதி நெருக்கடியில் தவிக்கும் சிவன்கோயில்; கல்லா கட்டும் ஆக்கிரமிப்பாளர்கள் .

கோயில் நிலத்தை முழுமையாக ஆக்கிரமித்ததோடு மட்டுமன்றி, அந்த இடங்களில் பணியாளர்கள் குடியிருப்பு, ஆசிரியர் குடியிருப்புகள், அஞ்சலகம் மற்றும் கனரா வங்கி ஆகியவற்றுக்கு பிரம்மாண்டமான கட்டடங்களைக் கட்டி, அதற்கான வாடகையை பல தசாப்தங்களாக தபோவனமே நேரடியாக வசூலித்து பல கோடிகளை ஈட்டி வருகிறது.

மறுபுறம், கோடிக்கணக்கான சொத்துக்களைக் கொண்டிருந்தும் தனது சொந்த நிலத்தின் வருமானத்தை இழந்து நிற்கும் தாருகாவனேஸ்வரர் கோயில் கடும் நிதி நெருக்கடியில் தத்தளிக்கிறது. ஆண்டுக்கு வெறும் ரூ.7.78 லட்சம் முதல் ரூ.12.77 லட்சம் மட்டுமே வருமானம் ஈட்டும் நிலைக்கு இக்கோயில் தள்ளப்பட்டுள்ளது. இந்த அற்பத் தொகையைக் கொண்டு, கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட வழங்க முடியாமலும், ஆகம விதிப்படி நடக்க வேண்டிய 5 கால பூஜைகளைச் சரிவர நடத்த முடியாமலும் கோயில் நிர்வாகம் இருளில் மூழ்கியுள்ளது.

 

ஆணையரின் உத்தரவுகளைக் குப்பைத் தொட்டியில் வீசிய உள்ளூர் அதிகாரிகள்

கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், கோயிலுக்கு வழங்க வேண்டிய எந்தவித அடிமனை வாடகையையும் தபோவனம் தரப்பில் செலுத்தப்படவில்லை. ஆரம்பக்கட்ட விசாரணையில் ரூ.10,09,308 வாடகை பாக்கி இருப்பதாகக் கணக்கிடப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அது ஆக்கிரமிப்பாளர்களால் சட்டை செய்யப்படவில்லை. இது குறித்து அறநிலையத்துறை உயர் மட்டத்தில் புகார்கள் சென்றதையடுத்து, 2011, 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆக்கிரமிப்பாளர்களிடம் எவ்வித புதிய ஒப்பந்தமும் செய்யக்கூடாது, ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும்” என்பதே அந்த உத்தரவுகள்.

ஆனால், உள்ளூர் அறநிலையத்துறை அதிகாரிகளோ ஆணையரின் உத்தரவுகளைச் செயல்படுத்தாமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கே விசுவாசம் காட்டி கோப்புகளை முடக்கியுள்ளனர். சட்டப்படி முறையாகக் கணக்கிட்டால், கடந்த பல ஆண்டுகளில் தபோவனம் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி மட்டும் சுமார் 20 கோடி ரூபாயைத் தாண்டும் என சட்ட வல்லுநர்கள் அதிர வைக்கிறார்கள்.

உயர்நீதிமன்றத்தின் சாட்டையடி: சிக்குவார்களா அதிகாரிகள்?

தொடர்ச்சியாக அரசு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பல புகார்கள் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், நீதியை நாடி இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியும், அப்பகுதியைச் சேர்ந்த சிவ பக்தருமான கே. தங்கராஜ் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் (W.P.(MD) No. 33523 of 2026) விரிவான பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு முகவரி மூலம் பல ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற அசைக்க முடியாத அரசு ஆவணங்களை ஆதாரங்களாக அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுதாகர் நாகராஜ் ஆஜராகி வலுவான வாதங்களை முன்வைத்தார்.

கடந்த 20/11/2026 அன்று இந்த முக்கிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஆவணங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது. உடனடியாக, சம்பந்தப்பட்ட கோயில் நிலங்களை தனிநபர்கள் பெயருக்கு மேற்கொண்டு பட்டா மாற்றம் செய்வது மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் எவ்வித பத்திரப்பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளுக்கு அதிரடியாக இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், ரூ.500 கோடி மதிப்பிலான இந்த நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை, வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் 3 வாரங்களுக்குள் விரிவான விளக்கமளிக்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

 

பல தசாப்தங்களாக உறங்கிக் கிடந்த நீதியின் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து போலி பட்டாக்கள் ரத்தாகி, 500 கோடி மதிப்பிலான சிவபெருமானின் சொத்துக்கள் மீண்டும் கோயிலுக்கே முழுமையாகத் திரும்புமா? தவறு செய்த வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிற கோயில் நிலங்களை மீட்பதற்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.