Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் முதல் வெற்றி; நல்லாட்சியே வெற்றிக்குக் காரணம் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் பேட்டி

0

'- Advertisement -

முதல்வர் விஜய் தலைமையிலான சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் முதல் வெற்றி; நல்லாட்சியே வெற்றிக்குக் காரணம்   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் பேட்டி

Ad banner

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மைதீன், திருச்சி காஜா நகர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

 

இன்று மறக்க முடியாத திருநாள். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் முதல் வெற்றி கிடைத்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் உருவான இந்தக் கூட்டணி, தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

லஞ்சம், லாவண்யம் இல்லாத ஆட்சியை வழங்குவேன் என்று கூறியவர் முதல்வர் விஜய். நான் எத்தனையோ தலைவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இவரைப் போல யாரும் கூறியதில்லை. எம்ஜிஆர் காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் கிடைத்த வெற்றியைப் போன்றே இந்த வெற்றியும் அமைந்துள்ளது.

இந்த வெற்றிக்கு முதல்வரின் நல்லாட்சியும் ஒரு முக்கியக் காரணமாகும். தேர்தல் காரணமாக, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மற்றும் வெற்றிப் பயணம் திட்டம் ஆகியவற்றை இரண்டு தொகுதிகளிலும் செயல்படுத்த முடியவில்லை. இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தால் வாக்கு சதவீதம் மேலும் அதிகரித்திருக்கும்.

அனைத்துக் கிராமங்களிலும் முதல்வர் விஜய் பரப்புரை மேற்கொண்டு வாக்குச் சேகரித்ததன் விளைவாகவே மக்கள் இந்த வெற்றியை வழங்கியுள்ளனர். மற்ற கட்சிகளின் வேட்பாளர்களால் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி மென்மேலும் வளர்ந்து புதிய வரலாறு படைக்கும். தொடர்ந்து வெற்றிகளைப் பெறும்.

இந்த வெற்றியைத் துரோகத்திற்குக் கிடைத்த இடைக்கால வெற்றி என முக.ஸ்டாலின் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு:- அவர் எதிர்க்கட்சி, அதனால் அவர் கூறுவது இயல்பானதுதான். ஆனால், துரோகம் என்பதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. ஒரு கட்சியில் வெற்றி பெற்றவர்கள் மற்றொரு கட்சிக்கு மாறுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நாங்கள் துரோகம் செய்ததாகக் கூறுவது எங்களுக்குப் புரியாத வார்த்தையாக உள்ளது. பணத்தைக் கொடுத்து எங்களை விலைக்கு வாங்கிய வரலாறும் கிடையாது. பணத்திற்கு அடிமையாகச் செல்லும் பழக்கமும் எங்களுக்கு இல்லை என்றார்.

அமைச்சர் ஷாஜகான் பேட்டி

இதனைத் தொடர்ந்து, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற்று முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர்.

கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நல்லாட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், தற்போது அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழக மக்கள் ஆட்சியின் பக்கம் நிற்கிறார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது.

இது 1 அல்லது 2 சதவீதம் போன்ற சிறிய வித்தியாசம் அல்ல. ஐந்து மாத கால ஆட்சிக்குப் பிறகு, தாராபுரத்தில் சுமார் 14 சதவீதமும், மதுராந்தகத்தில் சுமார் 9 சதவீதமும் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை ஐந்து மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.