Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட் எங்களது வியர்வையும் இரத்தமும் கலந்த இடம்.இதை மாற்ற நினைத்தால் ஆட்சி மாறும் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் எம்.கே. கமலக்கண்ணன்

0

'- Advertisement -

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மார்க்கெட். இந்த மார்க்கெட்டை நம்பி பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளும், தொழிலாளர்களும், தினக்கூலிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

Ad banner

இந்நிலையில், காந்தி மார்க்கெட்டை இடம் மாற்றும் திட்டத்திற்கு எதிராக வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் குடும்ப விழா சங்கத்தின் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சபி அகமது, கூடுதல் செயலாளர் மந்தை ஜெகன், துணைப் பொருளாளர் சுதாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் கீழ்க்கண்ட முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது :-

திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் எதிரே புதிய மார்க்கெட் அமைக்கும் திட்டத்தை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

வரலாற்று சிறப்புமிக்க காந்தி மார்க்கெட்டை அதே இடத்தில் தொடர்ந்து நிரந்தரமாக இயங்கிட அரசு வழிவகை செய்ய வேண்டும்.

மொத்த வியாபாரத்திற்கு காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மாற்று இடங்களை தேர்ந்தெடுத்து மார்க்கெட்டை விரிவாக்கம் செய்து தர வேண்டும்.

நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை முற்றிலுமாக தவிர்க்க உயர்மட்ட பாலம் ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட இந்த முக்கிய தீர்மானங்கள் அனைத்தும், சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாகக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் மூலமாக கோரிக்கை மனுவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில்,

“திருச்சி மாநகரின் வர்த்தக இதயமான காந்தி மார்க்கெட்டை நம்பி வாழ்ந்து வரும் சில்லறை வியாபாரிகள், மளிகைக் கடைக்காரர்கள், தொழிலாளர்கள், தரைக்கடை வியாபாரிகள் மற்றும் தினக்கூலிகளின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்பைச் சந்திக்கும். இந்த மார்க்கெட் என்பது வெறும் வியாபார இடமன்று; அது எங்களது வியர்வையும் இரத்தமும் கலந்த உழைப்பின் வெளிப்பாடு.

காந்தி மார்க்கெட்டை மாற்ற நினைத்தாலோ அல்லது மாற்றுத் திட்டம் போட்டாலோ ஆட்சி நிலைக்காது என்பதற்கு கடந்த கால தேர்தல்களே சாட்சியாகும். திருச்சி கிழக்கு தொகுதி என்பது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வென்ற தொகுதி என்பதை நாங்கள் தங்களுக்கு நினைவூட்ட வேண்டியதில்லை. தவெக மீண்டும் அத்தொகுதியில் வெற்றி வாகை சூட வேண்டுமென்றால், இச்சமூகப் பிரச்சினைக்கு முதல்வர் உடனடியாகத் தீர்வு காண வேண்டும். இல்லையெனில், வியாபாரிகளைத் திரட்டி மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்று எச்சரித்துள்ளனர்.

எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பில் திருச்சியின் ஒட்டுமொத்த வியாபாரிகளும் காத்திருக்கின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.