சிங்கப்பூரிலிருந்து வந்தவரை காரில் கடத்தி தாக்கி நகை, பணம் பறித்த மர்ம கும்பல்,திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் பரபரப்பு
சிங்கப்பூரிலிருந்து வந்தவரை காரில் கடத்தி தாக்கி நகை, பணம் பறித்த மர்ம கும்பல்,திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 47). இவர் சிங்கப்பூரில் வெல்டர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 24-ந்தேதி நள்ளிரவு இவர் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து உள்ளார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது மர்மநபர்கள் அவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளனர். அப்போது பெரியசாமியை தாக்கி, அவரிடம் இருந்த 1.5 லட்சம் பணம் மற்றும் 16 கிராம் தங்கச் செயினை பறித்துவிட்டு டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த பெரியசாமி சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பெரியசாமி திருச்சி விமான நிலைய காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஏர்போர்ட் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து யாரேனும் அவரை பின் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

