திருச்சியில் களைகட்டும் விநாயகர் சதுர்த்தி . 2 மடங்கு உயர்ந்த பூஜை பொருட்கள் விலை ..இன்று விநாயகரை வழிபட சிறந்த நேரம் …
திருச்சியில் களைகட்டும் விநாயகர் சதுர்த்தி: காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள் .. பழங்கள், பூக்கள் பூஜை பொருட்கள் விலை இரு மடங்கு உயர்வு
இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி விழா. தடைகளை நீக்கி, ஞானம், செல்வம், வெற்றி ஆகியவற்றை அருளும் விநாயகப் பெருமானின் பிறந்த நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. இன்று காலை 07:06 மணிக்கு தொடங்கும் சதுர்த்தி திதியானது நாளை 15ந்தேதி காலை 7:44 மணி வரை நீடிக்கிறது.விநாயகர் பெருமான் அவதரித்ததாக கருதப்படும் மத்தியான வேளையே வீட்டில் வழிபட மிகச் சிறந்த நேரமாகும். குறிப்பாக காலை 11:02 மணி முதல் மதியம் 1:31 மணி வரையிலான நேரத்தில் கணேச பெருமானை முறைப்படி பீடத்தில் எழுந்தருளச் செய்து மனதார வணங்குவது அளவில்லாத நன்மைகளைத் தரும்.
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடபட்டு உள்ள நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், தொடர் விடுமுறை காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் வியாபாரம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜை மற்றும் அலங்காரப் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மலர்கள், பழங்கள், வாழைக்கன்றுகள் மற்றும் தோரணைகளின் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சாதாரண நாட்களில் ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்யப்படும் பூக்களின் விலை, பண்டிகையை முன்னிட்டு தற்போது ரூ. 300 முதல் ரூ. 350 வரை விற்கப்படுகிறது. இதன்படி, சராசரியாக ரூ. 100 வரை விற்கப்பட்ட நாட்டு சாமந்தி தற்போது ரூ. 240 முதல் ரூ. 260 வரையிலும், வெள்ளை சாமந்தி ரூ. 300 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ரூ. 100 வரை விற்ற ஒரு சேர் மல்லிகை பூ ரூ. 350 முதல் ரூ. 400 வரையிலும், ஒரு கிலோ சாக்லேட் ரோஸ் ரூ. 300 முதல் ரூ. 350 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
பழங்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலை நேற்று மாலை நிலவரப்படி, மாதுளை ரூ. 150-க்கும், ஆப்பிள் ரூ. 200 முதல் ரூ. 250 வரையிலும், கொய்யாப்பழம் ரூ. 150-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. வழிபாட்டுக்கு அவசியமான கரும்பு ஒரு கத்தை ரூ. 600-க்கும், வாழைப்பழம் ஒரு தார் ரூ. 450 முதல் ரூ. 500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுதவிர, தென்னை இலைகளால் ஆன தோரணைகள் மற்றும் குடைகள், வாழைக்கன்றுகள் போன்றவையும் விற்பனைக்கு வந்துள்ளன. இதன்படி, பிள்ளையார் சிலைகள் ரூ. 200 முதல் ரூ. 2,500 வரையிலும், தென்னை தோரணை (50 பீஸ்கள்) ரூ. 200-க்கும், கம்பு (50 பீஸ்கள்) ரூ. 200-க்கும், வாழைக்கன்று (10 பீஸ்கள்) ரூ. 80 முதல் ரூ. 100 வரையிலும், பொரி ஒரு மூட்டை ரூ. 500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் விநாயகர் சிலைகள் ரூ.75 முதல் ரூ.750 வரை, விதவிதமான விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன. பொதுமக்கள் இதனை ஆர்வத்துன் வாங்கி செல்கிறனர்.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பழங்கள், பூக்கள் பூஜை பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

