Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

16 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து வைத்து மிரட்டி தொடர்ந்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்ட ரவுடிக்கு தூக்கு, நண்பர்களுக்கு கடும் சிறை தண்டனை வழங்கிய போக்சோ நீதிமன்றம்

0

'- Advertisement -

நெல்லையில் பிளஸ் 2 மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ரவுடிக்கு தூக்கு தண்டனையும், அவனது கூட்டாளிக்கு 20 ஆண்டு, மாணவியுடன் பழகி அழைத்துச் சென்றவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.நெல்லை பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 16 வயது சிறுமி ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு நெல்லையில் உள்ள வழிபாட்டு தலத்தில் பெயின்ட் அடிக்கும் பணி நடந்தது.

 

Ad banner

அங்கு வேலை பார்க்க வந்த விளாத்திகுளத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 27) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பல முறை செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமிக்கு பெற்றோர் இல்லை என்பதை தெரிந்து கொண்ட முனீஸ்வரன், சம்பவத்தன்று தனது அக்கா வீட்டிற்கு செல்லலாம், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி தனது மோட்டார் சைக்கிளில் கொக்கிரகுளம் கீழ வீரராகவபுரம் அடுத்துள்ள குருந்துடையார்பும் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது அங்கு மறைந்திருந்த முனீஸ்வரனுடன் ஏற்கனவே ஜெயிலில் பழகிய நண்பர்களான நெல்லை கொக்கிரகுளம் கீழ வீரராகவபுரத்தைச் சேர்ந்த சின்னக்குட்டி (வயது27), முருகேசன் (வயது 27) ஆகியோர் அந்த சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி கட்டாயப்படுத்தி கூட்டு பலாத்காரம் செய்தனர். இந்த படங்களை காட்டி மாணவியை மிரட்டி அடிக்கடி மூவரும் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மாணவியின் புகைப்படங்கள் அந்த பகுதி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் இதுகுறித்து பாளை.அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முனீஸ்வரன், சின்னக்குட்டி மற்றும் முருகேசன் ஆகிய 3 பேரும் சிறுமியை ஆபாச புகைப்படம் எடுத்து அடிக்கடி மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

இதுகுறித்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுரேஷ்குமார் கடந்த 3ம் தேதி அறிவித்து உடனடியாக 3 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்களை பாளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தண்டனை விவரங்களை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நேற்று நண்பகல் அறிவித்தார்.

 

இதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நீதிபதி தனது தீர்ப்பில், கொடூர குற்றத்தில் ஈடுபட்ட ரவுடி சின்னக்குட்டிக்கு தூக்கு தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும், முருகேசனுக்கு 20 ஆண்டுகளும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை 10 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சின்னக்குட்டி மற்றும் முருகேசன் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், 2 பேரின் பெயர்களும் ரவுடிகள் பட்டியலில் மேலப்பாளையம் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.