
திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் குழந்தை பெற்ற பத்தாம் வகுப்பு மாணவி. காதலன் மீது போலீசார் வழக்கு
பொன்மலை மகளிர் போலீசார் நடவடிக்கை.
திருச்சி பொன்மலைபட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு அந்தப் பள்ளியின் விடுதியில் நேற்று குழந்தை பிறந்தது தொடர்பாக
பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி திருச்சி பொன்மலைபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு நேற்று மாலை விடுதி வளாகத்திலே ஆண் குழந்தை பிறந்துள்ளது. தகவலறிந்த பள்ளி நிர்வாகம் மாணவியை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, காவல் துறையினருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் ஆகியோர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பள்ளிக் கல்வித் துறை சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ஒரு இளைஞரை அந்த மாணவி காதலித்து வந்ததாகவும், அதன்மூலம் கர்ப்பம் உண்டாகி குழந்தை பிறந்துள்ளதாகவும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இடம் நெய்வேலி என்பதால் வழக்கை நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இன்று மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். குழந்தை பெற்றுக் கொண்ட சிறுமிக்கு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 15 வயது சிறுமி பத்து மாத கர்ப்பமாக இருந்து பள்ளிக்குச் சென்று வந்த நிலையில் ஆசிரியர்களுக்கு மற்றும் விடுதி ஊழியர்களுக்கு எப்படி தெரியாமல் போனது ஏன் அப்பகுதி பொதுமக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர் ..

