
திருச்சி மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 8 நகர சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதில் செவிலியர்களின் பங்கு முக்கியமானது என்பதால், காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பில் மொத்தம் 8 நகர சுகாதார செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம்/தகுந்த அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 2 ஆண்டுகள் ஏ.என்.எம். (Auxiliary Nurse Midwife) பயிற்சி முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது .
.இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானவை என்றும், ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சேர்வதால் எதிர்காலத்தில் எந்தவிதமான பணிவரன்முறை உரிமையோ அல்லது நிரந்தரப் பணி நியமன உரிமையோ ஏற்படாது என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த நிபந்தனைகளை கருத்தில் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, பயிற்சி உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்பத்தைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை மாநகர் நல அலுவலர், பொது சுகாதாரப் பிரிவு (மைய அலுவலகம்), திருச்சி மாநகராட்சி, பாரதிதாசன் சாலை, கண்டோன்மெண்ட், திருச்சி – 620001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

