குறைபாடுள்ள கேமரா லென்ஸ் விற்பனை: நுகர்வோருக்கு ரூ.80,000 இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் ஆணையம் உத்தரவு
குறைபாடுள்ள கேமரா லென்ஸ் விற்பனை: நுகர்வோருக்கு ரூ.80,000 இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் ஆணையம் உத்தரவு
திருச்சி மாவட்டம், புலிவலம் பகுதியை சார்ந்த போட்டோகிராபர் ரவிச்சந்திரன் என்பவர், நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம், பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடமிருந்து கடந்த 18.07.2025 அன்று கேமரா லென்ஸை ரூ.50,000-க்கு வாங்கியுள்ளார்.
லென்ஸுக்கான தொகையை கூகுள் பே மூலம் செலுத்திய ரவிச்சந்திரன் லென்ஸைப் பெற்ற பின்னர் சோதனை செய்தபோது அதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து சக்திவேலிடம் உடனடியாக தெரிவித்த நிலையில், அவர் லென்ஸை சரிசெய்து தருவதாகவும், தேவையெனில் மாற்றித் தருவதாகவும் பலமுறை உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், பல மாதங்கள் கடந்தும் லென்ஸில் இருந்த குறைபாடு சரிசெய்யப்படவில்லை. பணத்தையும் திருப்பித் தராமல், லென்ஸையும் முறையாக வழங்காமல் சக்திவேல் காலம் தாழ்த்தியதால், ரவிச்சந்திரனுக்கு கடுமையான மனஉளைச்சல், அலைச்சல் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ரவிச்சந்திரன், துறையூர் வழக்கறிஞர் ராஜா மூலம், திருச்சிராப்பள்ளி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நுகர்வோர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் டி. சேகர் மற்றும் உறுப்பினர் ஜே.எஸ். செந்தில்குமார், ஆகியோர், எதிர்மனுதாரர் வழங்கிய சேவையில் குறைபாடு மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறை இருப்பது ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தனர்.

அதன்படி, எதிர்மனுதாரர் சக்திவேல், மனுதாரர் ரவிச்சந்திரனுக்கு:
• கேமரா லென்ஸின் விலையான ரூ.50,000-ஐ,
வழக்கு தாக்கல் செய்த நாளிலிருந்து தொகை செலுத்தும் நாள் வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவும்,
மனஉளைச்சல் மற்றும் சிரமத்திற்காக ரூ.20,000 இழப்பீடு வழங்கவும்,
வழக்கு செலவிற்காக ரூ.10,000 வழங்கவும், என உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்தத் தொகைகள் அனைத்தும் உத்தரவு நகல் பெற்ற நாளிலிருந்து ஆறு வாரங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்றும், தவறினால் இழப்பீட்டுத் தொகைக்கும் ஆண்டுக்கு 9 சதவீத வட்டி செலுத்த வேண்டும் என்றும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு, இணையவழி மற்றும் தனிநபர் விற்பனைகளிலும் நுகர்வோர் உரிமைகள் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்படுகின்றன என்பதையும், குறைபாடுள்ள பொருட்களை விற்பனை செய்து நுகர்வோரை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்தும் முக்கிய தீர்ப்பாகக் கருதப்படுகிறது.

