Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக தவெக-வின் கு.ப. கிருஷ்ணன் நியமனம்

0

'- Advertisement -

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தவெக-வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Ad banner

அப்போது, தமக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் இந்த உயரிய பதவியை வழங்கிய தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 

​”நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோல்வியைத் தழுவினேன். இருப்பினும், அதனை மனதில் வைத்து எனக்கு இந்த உன்னத பதவியை நம் தலைவர் விஜய் அவர்கள் இன்று வழங்கியுள்ளார். என் வாழ்நாளில் மறக்க முடியாத அறிவிப்பு இது.

​முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவிக் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் மக்களிடமும், என்னிடமும் இருந்தது உண்மைதான்.

அது தலைவரின் காதுகளுக்கும் சென்றுள்ளது.

 

திருச்சியில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா நாளை நடைபெற உள்ள சூழலில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் மூலம் முத்தரையர் மக்கள் முழு திருப்தி அடைந்துள்ளனர்.

 

தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் பலருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும்.

இப்போது முசிறியில் மட்டுமே முத்தரையர் சமூகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வென்றுள்ளார்.

 

நான் தோல்வியுற்றாலும், எனக்கு ‘கேபினட் அமைச்சர் அந்தஸ்து’ (In the rank of Cabinet Minister) வழங்கி, சட்டத்திற்குட்பட்டு மிகச் சரியான அங்கீகாரத்தைத் தளபதி விஜய் கொடுத்துள்ளார்.

 

​”நகர்ப்புறங்களில் புதிதாக தரமான குடியிருப்புகளை உருவாக்குவதற்கும், ஏற்கனவே பழுதடைந்துள்ள பகுதிகளைப் புனரமைப்பு செய்து ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்களை வசதியாக மாற்றுவதற்கும் எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தலைவர் காட்டும் திசையில் எனது பணிகள் அமையும். மக்கள் மற்றும் தலைவரின் எதிர்பார்ப்பை இந்த கிருஷ்ணன் நிச்சயமாக முழுமையாகப் பூர்த்தி செய்வேன்.

​தமிழக அரசை திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சிப்பது குறித்துக் கேள்வி எழுப்பியபோது, அவர் காரசாரமாகப் பதிலளித்தார்.

 

“நம் தலைவர் விஜய் அவர்களின் அரசு பொறுப்பேற்று இன்னும் 15 நாட்கள் கூட முழுமையாக நிறைவடையவில்லை. அதற்குள் விமர்சனம் செய்கிறார்கள்.

 

தமிழ்நாட்டில் தற்சமயம் எதிர்க்கட்சியாக இருக்கும் அனைத்தும் ‘மைனாரிட்டி’ கட்சிகள் தான்.

ஒரு சோறு பதமாக வெந்துள்ளதா என்று பார்ப்பதுதான் எதிர்க்கட்சியின் வேலை; ஆனால் இவர்கள் பானையையே உடைக்கப் பார்க்கிறார்கள்.

 

இதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அண்ணாவை வணங்குவதற்கும், போற்றுவதற்கும் கூட அவர்களுக்குத் தகுதி இல்லை.”

​காவிரி டெல்டாவில் தவெக-வின்

அசுர வளர்ச்சி

 

​திருச்சி மற்றும் காவிரி டெல்டா பகுதிகள் திமுகவின் கோட்டை என்று சொன்னவர்களின் கூடாரத்தை தகர்த்து, திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில் 6 தொகுதிகளைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளோம் (திருச்சி கிழக்கு, மணப்பாறை, துறையூர், திருவெறும்பூர், முசிறி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தொகுதிகள்). இது நம் கழகத்தின் அசுர வளர்ச்சியைக் காட்டுகிறது” என்று பெருமிதத்துடன் கூறினார்.

​மேலும், கூட்டணி குறித்தோ அல்லது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தோ தலைமை எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு, தலைவரின் ஆசி பெற்ற பிறகு விரிவாகப் பேசுவதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வின் போது உடன் நிர்வாகிகள் கருமண்டபம் பத்மநாதன்,நாகநாதர் பாண்டி,ஏர்போர்ட் விஜி,தேவா லோகநாதன்,வழக்கறிஞர் முத்துமாரி, பார் கரிகாலன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.