திருச்சி அமமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வருத்தத்துடன் ராஜினாமா .
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வருத்தத்துடன் ராஜினாமா .

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.
என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம் இல்லாமல் செய்து வருகிறேன்.
ஆனால் சாதாரண தொண்டனாக, மாவட்ட, மாநில நிர்வாகியாக, மாவட்டச் செயலாளராக வழி நடத்திய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில், தொடர்ந்து பணியாற்றும் சூழ்நிலைகள் இல்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறியியல் பட்டதாரி மாணவனாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக 1996-ம் ஆண்டு புரட்சிதலைவி அம்மா அவர்களின் தொண்டனாக இணைந்தேன்.
அதன் பின் முதுகலை வணிக மேலாண்மை மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்று, பல நாடுகளிலும் மென்பொருளியல் துறையில் வேலை பார்த்து வந்தேன்.
புரட்சித்தலைவி அம்மா இருந்த காலத்தில் “அம்மா” என்ற ஒரு பெயரே போதுமானதாக இருந்ததால், என்னை போன்றவர்களுக்கு, தேர்தல் காலங்களை தவிர மற்ற நேரங்களில் எந்த தேவையும் இல்லாமல் இருந்தது.
ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த பின் உருவான அசாதாரண சூழ்நிலைகளை, ஒட்டுமொத்த இந்தியாவும் அறியும்.
தூங்கவிடாமல் செய்த நிகழ்வுகள், என்னை, அதுவரை நான் பார்த்துக் கொண்டிருந்த வேலையில் இருந்து, எனது குடும்பத்தின் சம்மததுடன் முழுவதுமாக வெளியேறச் செய்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைத்தது.
அன்று முதல் இன்று வரை நான் வகித்த பதவிகளுக்கு எந்த சமரசமும் இல்லாமல், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை நீங்கள் அறிவீர்கள்.
கடந்த சில ஆண்டுகளாக, எனது குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று கூட எனக்கு தெரியாது. வேறு எந்த தொழிலிலும் கவனம் கொள்ளாமல், முழு நேர ஊழியனாக கட்சி பணிகள் மட்டுமே செய்தேன்.
கடந்த 2022 ஆண்டு நடைபெற்ற மாமன்ற தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்சியின் ஒரே மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றேன்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக மக்கள்செல்வர் வாய்பளித்ததை அடுத்து, எனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றாலும், எனது நிர்வாகிகளாலும், கூட்டணிக் கட்சிகளின் முழு அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பினால், நான் மாவட்டச் செயலாளராக இருந்த திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில், ஒவ்வொறு தொகுதியிலும் சராசரியாக 18 ஆயிரம் முதல் 26 ஆயிரம் வாக்குகள் பெற்றேன்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின், மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகும் எனது மாவட்டச் செயலாளர் பதவியை முன்பை காட்டிலும் வீரியத்துடன் செயலாற்றினேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எத்தனையோ போராட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என்று எந்த எதிர்பார்ப்புமின்றி நிர்வாகிகள், ரத்தத்தை வியர்வையாக சிந்தி இந்த இயக்கத்தை திருச்சியில் வளர்க்க இயங்கி வந்தாலும், கடந்த சில மாதங்களாக, இயக்கத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளால் எங்களைப் போன்றோருக்கு ஏகப்பட்ட நெருடல்கள்.
“பகையாளிகள் பங்காளிகளாக” மாறிப்போனதால் ஆதாயம் யாருக்கு என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்புகள் என்பது எங்களைப் போன்ற நிர்வாகிகளுக்கு மட்டுமே.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், கூட்டணி தர்மத்தை மீறி எத்தனையோ நிகழ்வுகள், மிகுந்த மன அழுத்தத்தையே தந்தது. மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளைச் செயலாளர் வரை நாங்கள் பட்ட மன உளைச்சலுக்கு அளவே இல்லை.
ஆனால், அத்தனை மன அழுத்தங்களையும் மீறி இந்த தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற கடமையால்,
தேர்தலுக்கு முன் இயக்கத்தில் இருந்து விலகினால், ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் நிராயுதபாணியாக விட்டுவிட்டு செல்ல நேரிடும் என்பதால், தேர்தல் முடியும் வரை பொறுத்துக் கொண்டு பணியாற்றினேன்.
இப்பொழுது, தேர்தல் முடிந்த பின்பு, எனது ராஜினாமா யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற தெளிவுடன் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இந்த இயக்கத்திற்காக எத்தனையோ இழப்புகளை தாங்கி வேலை செய்த நிர்வாகிகளுக்கு, ஏதும் செய்ய முடியாத நிலையும், அவர்களுக்கு தலை குனிவை உருவாக்கிய நிகழ்வுகளும், சூழ்நிலைகளும் தொடர்வதால், எனது அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன்.
இந்நாள் வரை, என் கடமையை சரிவர செய்த பின், இந்த முடிவை நிமிர் நெஞ்சுடன், தெளிந்த நீரோடையாக அறிவிக்கிறேன்.
எத்தனையோ இழப்புகள் இருந்தாலும், பத்து வருடம் என்கின்ற “காலம்” & “உழைப்பு” என்கின்ற ஈடுகெட்டவே முடியாத, விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை நாங்கள் வீணாக்கி விட்டோம்.
இதுநாள் வரை என்னை அரவணைத்து, எனக்கு வழிகாட்டியாக, உற்ற தோழனாக, தோளோடு தோள் நின்று பணியாற்றிய ஒவ்வொரு நிர்வாகிக்கும், முக்கியமாக மக்கள்செல்வர் அவர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எத்தனையோ போராட்டங்களில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் குடும்பத்தையும் குழந்தைகளையும் சமாளித்து, தன்னார்வத்துடன் பங்கேற்று, கைது செய்யப்பட்டும் கலங்காத மகளிர் அணியை சார்ந்த ஒவ்வொரு சகோதரியின் பொற்பாதங்களை தொட்டு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, திருவாளர்கள் MS ராமலிங்கம், சாருபாலா தொண்டைமான், தன்சிங், M.ராஜசேகரன், செந்தில்குமார், ராமமூர்தி, பாஸ்பிரபு, கல்நாயக் சதீஷ், வெங்கட்ரமணி, மதியழகன், கைலாஷ், நாகூர் மீரான், தில்லை சதாம், KVD கலைச்செல்வன், பெஸ்ட் பாபு, தருண், கமருதீன், கருப்பையா, கதிரவன், சீனி ஆனந்த, உமாபதி, நாகநாதர் சிவகுமார், கல்லணை குணா, கருணாநிதி, ஜான் கென்னடி, இளங்கோவன், சண்முகம், சமுத்திரம், வேதாந்திரி பாலு, மலைக்கோட்டை சங்கர், செங்குட்டுவன், NSN அப்துல்லா, GP சரவணன், பஷீர் அகமது, ராஜா ராமநாதன், டோல்கேட் கதிரவன், சாந்தா, லதா, அனுசூயா, அகிலா, நல்லம்பாள், வேதராஜன், ஆனந்தராஜ், வேங்கூர் மணி, கொட்டப்பட்டு சசி, சக்திமணி, சீனி.ராஜ்குமார், வழக்கறிஞர் பிரகாஷ், மலைக்கோவில் சக்திவேல், பொன்மலை சங்கர், நவல்பட்டு துளசிதாசன், KS கண்ணன், சுபாஷ், கோபிநாத், சாகுல், மதிவாணன, நல்லுசாமி, சிங்காரம, வெள்ளைச்சாமி, பிரகாஷ், கிள்ளனுர் ராஜா, வெற்றிவேல், பெரியசாமி, நிக்சன், அருள்தாஸ், நீலகண்டன், அழகர்சாமி, மாரிமுத்து, முகமது ஹாரிஸ், லோகு உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கும்,
எனக்கு உற்ற துணையாக இருந்த திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை சட்டமன்ற தொகுதியை சார்ந்த வட்டச் செயலாளர்களுக்கும், ஊராட்சி செயலாளர்களுக்கும், வார்டு செயலாளர்களுக்கும், கிளைச் செயலாளர்களுக்கும், சார்பு அணி நிர்வாகிகளுக்கும், பகுதி நிர்வாகிகளுக்கும், ஒன்றிய நிர்வாகிகளுக்கும், நகராட்சி நிர்வாகிகளுக்கும், பேரூராட்சி நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
“எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…
எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..
எதற்காக போரிட்டோமோ…
அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்…
மடிந்து போவது அப்பாவி போர்வீரர்களே.
காலமும், தெம்பும், தெளிவும் இருப்பதால்….
மீண்டு வருவோம்.
மீண்டும் வருவோம்.”
என்றென்றும் நன்றியுடன்,
ப.செந்தில்நாதன் BE, MBA (UK), Ex MC என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
திருச்சியில் கடந்த நான்கு வருடமாக செந்தில்நாதன் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின்பு தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எழுச்சியுடன் செயல்பட்டு வந்தது இனி திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உறுப்பினர்களை தேட தான் வேண்டும் .

