திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2543 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரும் செவ்வாய்க்கிழமை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் ஈடுபடுவார்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான வே.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2026-ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தப் பணிகள் எதிர்வரும் 04.11.2025 அன்று முதல் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சரவணன் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
மேற்படி ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக அனைவருக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் நல் ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்ததாவது, “வாக்காளர் கணக்கெடுப்பு பணிக்காலம் : 04.11.2025 முதல் 04.12.2025 வரையும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் : 09.12.2025, ஆட்சேபணை மற்றும் முறையீட்டுக் காலம் : 09.12.2025 முதல் 08.01.2026 வரையும் நடைபெறவுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.2026 அன்று வெளியிடப்படும்.
இந்திய தேர்தல் ஆணையம் இதற்கு முன்னர் தமிழ் நாட்டில் கடைசியாக 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு தீவிரத்திருத்த பணிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியுள்ளது. மேலும், இப்பணிக்காக தனி செயலியும் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தொடர்புடைய அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சியும் ஆலோசனையும் வழங்கப்படவுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நியமனம் செய்யப்பட்டுள்ள 2543 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முழுமையாக இப்பணியில் ஈடுபடுவார்கள்.
மேற்படி வாக்குச்சாவடி அலுவலர்களால் எதிர்வரும் 04.11.2025 முதல் 04.12.2025 வரை இல்லந்தோறும் கணக்கெடுப்புப் படிவம் அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட வாக்காளர்களால் விவரங்கள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் அப்படிவங்கள் திரும்ப பெறப்படும். இப்பணியின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி பெறப்பட்ட படிவங்கள் கணினியில் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
முகவர்களும் இணைந்து செயல்படுவார்கள். மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்யப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அவர்களுடைய வாக்குச்சாவடிக்கு உட்பட்ட தற்போது நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர் ஒவ்வொருவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்களின் விவரங்கள் அச்சிடப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை (இரட்டை பிரதிகளில்) வழங்குவார்.
பூர்த்தி செய்யப்பட்ட மேற்படி பவடித்தினை பெற அந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் மீண்டும் வாக்காளர்களின் வீட்டிற்கு வருகை தருவார். வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்பு படிவத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும். குடும்ப உறுப்பினர் யாரேனும் அந்த விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வழங்கலாம். படிவத்தில் அந்த வீட்டில் இருக்கும் பிற வாக்காளர்களின் உறவு முறையினை தெரிவிக்க வேண்டும்.
புதிய வண்ண படத்தை அதற்கான இடத்தில் ஒட்டி வழங்க வேண்டும். மீள பெறப்படும் கணக்கெடுப்பு படிவங்களின் அடிப்படையில் வாக்காளர் பதிவு அலுவலரால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதனை தொடர்ந்து ஆட்சேபணைகள் மற்றும் கோரிக்கை காலத்தில் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வாக்காளர் பதிவு அலுவலரால் முடிவு செய்யப்படும். மேலும் கணக்கெடுப்பு படிவத்தில் தவறான தகவல் வழங்கிய அல்லது தகவல் அளிக்காத வாக்காளர்களின் விண்ணப்பங்களின் மீது வாக்காளர் பதிவு அலுவலர் ஒரு அறிவிப்பு வழங்குவார்.
அதன் மீது வாக்காளர் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை செய்து இறுதி ஆணை பிறப்பிப்பார். அதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும்’ என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான வே.சரவணன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆர்.பாலாஜி, ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

