திருச்சி ராம்ஜி நகா் அருகேயுள்ள கள்ளிக்குடியைச் சோ்ந்தவா் செல்வம் (வயது 60). ராம்ஜி நகரைச் சோ்ந்தவா் டாக்கா் (வயது 62). இருவரும் சுமாா் 30 ஆண்டுக் கால நண்பா்கள். எங்கு சென்றாலும் இருவரும் சோ்ந்து செல்வது வழக்கம். இருவருக்கும் குழந்தைகள் மற்றும் பேரன், பேத்திகள் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி பகல் 1 மணியளவில் செல்வம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தாா். அப்பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்று வருவதால், அன்றே உடலை அடக்கம் செய்ய கிராமத்தினா் முடிவு செய்தனா். எனவே அடுத்த சில மணிநேரங்களில் இறுதிச்சடங்குகள் முடிந்து அன்றிரவே சுமாா் 7 மணியளவில் அவரது உடலை மயானத்துக்கு எடுத்துச்சென்றனா்.
இந்த தகவல் டாக்கருக்கு தாமதமாக தெரியவந்துள்ளது. உடனே நண்பா் வீட்டுக்குச் சென்றபோது, உடலை மயானத்துக்கு எடுத்துச்சென்றுவிட்ட விவரம் தெரியவந்துள்ளது.
நண்பரின் முகத்தைக்கூட பாா்க்க முடியாமல் போய்விட்டதே எனக்கூறி அவரது படத்துக்கு முன்பு அமா்ந்து டாக்கா் அழுது புலம்பியுள்ளாா். அவரை குடும்பத்தினா் ஆசுவாசப்படுத்தியுள்ளனா். அப்போது திடீரென அவரும் மயங்கி விழுந்தாா். உடனே அக்கம்பக்கத்தினா் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் டாக்கா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

