கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சிகரமாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 25). பிஇ பட்டதாரியான இவர் வேப்பனப்பள்ளியில் கொங்கானப்பள்ளி சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக செல்போன், செல்போன் உதிரிபாகங்கள், சிம்கார்டுகள் மற்றும் ஆன்-லைன் பணப்பரிமாற்றம் செய்யும் கடையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் சிகரமாகனப்பள்ளி கிராமத்தில் உள்ள சதாசிவம் வீடு மற்றும் அவரது கடையில் பெங்களூரு சிபிஐ காவல் துணை கண்காணிப்பாளர் சாய் கிரண் தலைமையில் டெல்லியைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் திடீரென 2 பிரிவாக பிரிந்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனை மாலை 5.30 மணி வரை நடந்தது.
இதில் கடையில் இருந்து மடிக்கணினி, 3 செல்போன்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், சதாசிவத்தை கைது செய்து விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், வேப்பனப்பள்ளி போலீசார் மற்றும் சதாசிவத்தின் குடும்பத்தினருக்கும் கைது அறிவிப்பு கடிதத்தை வழங்கினர்.
இது தொடர்பாக சதாசிவத்தின் குடும்பத்தினரிடம் சிபிஐ அலுவலர்கள் கூறும்போது:
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சதாசிவம் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கியுள்ளார். அந்த எண் மூலம் பல்வேறு மோசடி பணப் பரிவத்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நீதிமன்றத்தில் தேடுதல் உத்தரவு பெற்று சதாசிவத்தை விசாரணைக்காக கைது செய்துள்ளாம் என தெரிவித்துள்ளனர் .
புதிய சிம் வாங்க பலரும் கடைக்கு வருவார்கள் .யார் என்று தெரியாமல் சிம் கார்ட் விற்பனை செய்ததால் சிபிஐ கைது நடவடிக்கை வரை சென்றுள்ளது மிகவும் மன வருத்தத்தை சதாசிவம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.