திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் மற்றும் விடுதி வசதி ஏற்படுத்தி தரக்கோரி இந்திய மாணவர் சங்கம் மனு.
திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு உரிய விடுதி வசதி மற்றும் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள் கிழமை மனு கொடுக்கப்பட்டது

திருச்சி மாவட்டம் காஜாமலை பகுதியில் இயங்கி வரக்கூடிய கல்லூரி அரசு சட்டக்கல்லூரி. இந்த கல்லூரியில் ஆண்டு தோறும் பல்வேறு மாணவர்கள் தங்களது சட்டப் படிப்பை படித்து முடித்து வழக்கறிஞராகவும் நீதிபதிகளாகவும் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றி வருகின்றனர்.
அதேபோல் இந்த கல்லூரியில் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டத்தை சார்ந்த மாணவர்கள் சட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கென்று தனியாக எவ்வித தங்கும் வசதி இல்லாத காரணத்தினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாவட்டத்தை சார்ந்த மாணவர்கள் அதிக அளவில் வாடகை செலுத்தி வீடு எடுத்து தங்கி படிக்கும் நிலைமை ஏற்பட்டு வருகிறது ,
அது மட்டும் இல்லாமல் ஒரு ரூமில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து தங்கும் நிலைமை உள்ளது. இதனால் மாணவர்கள் மனது அளவிலும் உடல் அளவிலும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கென்று விடுதி வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு மாணவர்கள் இலவச பேருந்தில் பயணிப்பது போல் திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாசை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் சூரியா தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. கிளைச் செயலாளர் அபிராமி, சட்டக் கல்லூரி மாணவர் துணை பொறுப்பாளர் மணி மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் உடன் சென்று மனு அளித்தனர்.

