பிரபல பின்னணி பாடகர் நேரலையில் பாடிக்கொண்டிருந்த போது, பெண் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுப்பதற்காக வந்தனர்.
அப்போது, வந்த ஒரு பெண் ரசிகை அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த போது, பாடகரோ அந்த பெண்ணின் தலையை திருப்பி உதட்டில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், பாடகரின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
பிரபல பாடகரான உதித் நாராயண், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், ஒடியா, நேபாளி, போஜ்புரி, பெங்காலி என பல மொழிகளில் பாடி இருக்கிறார். மேலும், பத்ம பூஷண்,லதா மகேஷ்கர் விருது, பத்மஸ்ரீ என பல உயரிய விருதுகளை பெற்று இருக்கும் இவர், தமிழில் அச்சச்சோ புன்னகை, காதல் பிசாசே, சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா என பல ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். 70வயதான இந்த பாடர் மேடையின் அசிங்கமாக நடந்து கொண்டது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
லைவ் ஷோவில்: பாடகர் உதித் நாராயண், நேரலை நிகழ்ச்சியில் ‘டிப் டிப் பர்சா பானி’ என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தார். அந்த பாடலை கேட்டு மகிழ்ந்து போன அவரின் தீவிர ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுக்க மேடைக்கு அருகில் கூடினர். அப்போது, பெண் ரசிகர் செல்ஃபி எடுத்துவிட்டு, பாடகர் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அப்போது, பாடகர், அந்தப் பெண் தலையை பிடித்து திருப்பி உதட்டில் முத்தம் கொடுத்தார். அது மட்டுமில்லாமல், மற்றொரு பெண் ரசிகை பாடகரை முத்தமிட்டு கட்டிப்பிடிக்க முயன்றபோது, உதித் நாராயண் அவரது கன்னத்தில் முத்தமிட்டார். அதோடு மட்டுமில்லாமல், செல்ஃபி எடுக்க வந்த மற்றொரு பெண்ணின் உதட்டிலும் முத்தம் கொடுத்தார். இதை கூட்டத்தில் இருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இணையவாசிகள் பாடகர் உதித் நாராயணனை திட்டித் தீர்த்து வருகின்றனர். இணையவாசி ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், அந்தஸ்துள்ள ஒரு பாடகர் பொதுவில் இப்படியா அசிங்கமாக நடந்து கொள்வது, அவர் தனது பொருப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார். மற்றொரு இணையவாசி, உதித் நாராயண் இல்லை… இது AI தொழில்நுட்ப வீடியோ என நான் நம்புகிறேன். அவரின் இந்த செயல் நமது கலாச்சாரத்தை அழித்துவிடும் என்றார். மேலும், அவர் முத்தம் கொடுத்த போது கூட்டத்தில் இருந்த மக்கள் ஏன் ஆரவாரம் செய்தனர் என கேட்டுள்ளார்.
இதில் என்ன தவறு: பலர் பாடகர் உதித் நாராயணனை விமர்சித்து வந்தாலும், சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பொதுஇடத்தில் கொடுத்த முத்தம் அருவருப்பானது தான். ஆனால், இதில் என்ன தவறு? அவர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி கொடுக்கவில்லை. ரசிகர்கள் அவர் மீது இருந்த அன்பால் தான் அவரிடம் வந்தார்கள். கடைசியா வந்த பெண், அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்த்த பிறகு அவர் அருகில் வந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி பாடகருக்கு எதிராக இணையத்தில் மோசமான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் நேரத்தில், இந்த சம்பவம் குறித்து உதித் நாராயண் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.