மைக்ரோ பைனான்ஸ் முகவர்கள் 4 பேர் அதிக வட்டி வசூல் செய்து ஆபாசமாக திட்டியதால் 2 குழந்தைகளுடன் பெற்றோர் தற்கொலை .
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் கவுண்டம்பாளையம் என்ற பகுதியில் தனசேகர் என்பவர் தனது மனைவி பாலாமணியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு வந்தனா என்ற மகளும், மோனிஷ் சென்ற மகனும் இருந்தனர். தம்பதியினர் இருவரும் வெள்ளக்கோயில் அருகே உள்ள தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இதனிடைய தனசேகருக்கு சரிவர வேலை இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் அவர் செலவுக்காக பலரிடம் கடன் வாங்க தொடங்கியுள்லார். கடன் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கலுக்கு மறுநாள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி காலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் கடன் பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கடன் பிரச்னையால் அவமானமாக உள்ளதாகவும், வெளியில் தலைகாட்ட முடியவில்லை எனவும் இருவரும் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் குழந்தைகளை கொன்று விட்டு இருவரும் தற்கொலை செய்து கொள்ள விபரீத முடிவெடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து தங்கள் திட்டப்படி தென்னை மரத்தில் வண்டுகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து மகள் வந்தனா மற்றும் மகன் மோனிஷூக்கு கொடுத்துள்ளனர். ஜூஸ் என ஆசையாக வாங்கி பருகிய இருவரும் அதில் கசப்பு தன்மை இருந்ததால் அதனை கீழே கொட்டி விட்டு கதறி அழுதனர். அதேசமயம் தனசேகரும், பாலாமணியும் மாத்திரைகளை தின்று விட்டனர்.

இதனால் அவர்கள் உயிருக்கு போராடியுள்ளனர். இதனைக் கண்டு குழந்தைகள் அலறி துடித்தனர். அவர்கள் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு வந்து என்னவென்று பார்த்தபோது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு தங்களும் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் வழியில் தனசேகரன் மற்றும் பாலாமணி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் வந்தனா, மனீஷூக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 16ஆம் தேதி காலையில் இருவரும் உயிரிழந்தனர். 4 பேர் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்திடது.
இது தொடர்பாக சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கடன் பெற்ற நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஆபாசமாகவும், வட்டிக்கு மேல் வட்டி வசூலித்ததால் தன்னால் அதிலிருந்து மீள முடியவில்லை என தனசேகர் எழுதிய கடிதமானது சிக்கியதாக சொல்லப்படுகிறது.
இதனடிப்படையில் இந்த வழக்கில் தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மைக்ரோ பைனான்ஸ் முகவர்களான நாராயணசாமி, வெண்ணிலா, சுமதி ஆகியோருடன் பைனான்சியர் கோபி சங்கரையும் சேர்த்து போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.