Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.9.50 லட்சம் செலவு செய்த பரிகார பூஜை பலிக்காததால், தனது பேஸ்புக் நண்பருடன் சேர்ந்து ஜோதிடரை போட்டு தள்ளிய பெண் கைது.

0

'- Advertisement -

9 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுத்து பரிகார பூஜை செய்தும் பலன் கிடைக்காததால், ஜோதிடரை போட்டு தள்ளிய பெண். ஒருவருக்கு வலை

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (வயது 64) . நாட்டு வைத்தியரான இவர், ஜோதிடமும் பார்த்து வந்துள்ளார். ஜான் ஸ்டீபனின் மகளுக்கு திருமணமாகி சென்ற நிலையில், மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார். இதனால், கணவன் – மனைவி இருவரும் ஆசாரிப்பள்ளத்தில் தனியாக வசித்து வந்து உள்ளனர்

கடந்த 8 ஆம் தேதி ஜோதிடரின் மனைவி விஜயகுமாரி வெளியே சென்றுள்ளார். பின்னர், வீடு திரும்பிய போது ஜான் ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக விஜயகுமாரி ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜான் ஸ்டீபனின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்டமாக மர்ம மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஆனால், உடற்கூராய்வு முடிவில், ஜோதிடர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. பின்னர் கொலை வழக்காக மாற்றிய போலீசார், தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கொலை வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம் கட்டிமாங்காடு பகுதியை சேர்ந்த கலையரசி(வயது 43) மற்றும் நெல்லை மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த 25 வயதான நம்பிராஜனுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, இருவரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில், கருத்து வேறுபாடு காரணமாக கலையரசி, தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது. பிரிந்து சென்ற தனது கணவருடன் சேர்ந்து வாழ பரிகாரம் தேடி, ஜோதிடம் பார்ப்பதற்காக ஜான் ஸ்டீபனை அணுகியுள்ளார். அப்போது சில பரிகாரங்கள் செய்தால் கணவருடன் சேர்ந்து வாழலாம் என ஜான் ஸ்டீபன் நம்பிக்கை அளித்ததாக கூறப்படுகிறது.

இதை நம்பி, பரிகார பூஜைக்காக 9 லட்சத்து 50 ரூபாய் வரை ஜோதிடருக்கு கலையரசி கொடுத்துள்ளார். அதன் பின்னரும் தம்பதி இடையே சுமூக உறவு எட்டப்படாமல், மீண்டும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஜோதிடர் கூறிய வாக்குறுதியும், பரிகாரமும் பலன் அளிக்காததால், கொடுத்த பணத்தை கேட்டு கலையரசி குடைச்சல் கொடுத்துள்ளார்.

பணத்தை திருப்பித்தர முடியாது என்று ஜோதிடர் ஜான் ஸ்டீபன் கூறியதால், ஆத்திரத்தில் அவரை தீர்த்துக்கட்ட கலையரசி சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக, பேஸ்புக் மூலம் பழகிய நண்பர் நம்பிராஜனின் உதவியை நாடியுள்ளார். அதற்காக அவருக்கும் பணமும் கொடுத்துள்ளார். இதையடுத்து, இருவரும் சேர்ந்து ஜோதிடரை தீர்த்துக்கட்ட நாள் குறித்துள்ளனர்.

திட்டமிட்டபடி கடந்த 8 ஆம் தேதி ஜான் ஸ்டீபனின் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தது போல் வீட்டில் தனியாக இருந்த ஜான் ஸ்டீபனை பிடித்து இருவரும் தாக்கியுள்ளனர்.

அப்போது, அவரின் கழுத்தை துண்டால் இறுக்கியும், தலையை தரையில் அடித்தும் கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். பின்னர், எதுவும் நடக்காதது போன்று அங்கிருந்து இருவரும் தப்பியோடியுள்ளனர். போலீசாரும் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்ததால், வழக்கில் இருந்து தப்பித்து விட்டதாக நினைத்தவர்கள், ஜோதிடரின் உடற்கூராய்வு அறிக்கை மூலம் மாட்டிக் கொண்டுள்ளனர்.

கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக செய்த பரிகார பூஜை பலிக்காததால், தனது பேஸ்புக் நண்பருடன் சேர்ந்து ஜோதிடரை திட்டம் தீட்டி பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் நாகர்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.