தொடர் விடுமுறை முடிந்து ஏராளமானோர் ஊர் திரும்பியதால் விமான நிலையத்திலும் அலைமோதிய கூட்டம். டிக்கெட் கட்டணங்கள் 3 மடங்கு உயர்ந்தது
பொங்கல் தொடர் விடுமுறை முடிந்தது
ஏராளமானோர் ஊர் திரும்பியதால்
திருச்சி ரெயில்
பஸ் நிலையங்களில் மட்டுமில்லாமல் திருச்சி வான நிலையத்திலும் நிரம்பிய கூட்டம்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் பண்டிகையை கொண்டாட சென்னை போன்ற பெரும் நகரங்களில் பணியாற்றவர்கள் சொந்த ஊர் வந்து இருந்தனர் . தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து ஏராளமானோர் புறப்பட்டதையடுத்து திருச்சியில் ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் மட்டுமில்லாமல் விமான நிலையத்திலும் அதிகளவிலான பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த நிலையில் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றிருந்த பொதுமக்கள், பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவரவர் தங்கியுள்ள ஊர்களுக்கு புறப்பட்டனர். தமிழக அரசு பொங்கல் பண்டிகை விடுமுறையை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றது. மாநிலத்தின் மையப் பகுதி திருச்சி என்பதால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாகவே திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
குறிப்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிகவும் அதிகளவில் காணப்பட்டது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், பகலிலிருந்தே பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏராளமான பயணிகள் பயணித்தனர். அதுபோல பஸ் நிலையங்கள் மற்றும் பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு செய்து பயணிக்க அரசு ஏற்பாடு செய்திருந்த நிலையிலும், முன்பதிவில்லா பேருந்துகளிலும் வழக்கம் போலவே கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததையடுத்து, திருச்சி மன்னார்புரம் மற்றும் மத்தியபேருந்து நிலையம் அருகே சோனா மீனா திரையங்கம் பகுதிகளில் தார்காலிக பேருந்து நிலையங்கள் சனிக்கிழமை முதல் செயல்பட்டன.
மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனால் மக்கள் சிரமமின்றி பயணம் செய்தனர்.அரசு போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்காக பொதுமக்கள் பயணிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
திருச்சி விமான நிலையம் :
திருச்சியிலிருந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்கப்படுகிறது. இதில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து மக்கள் அதிகளவில் பயணித்ததால் விமானங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதனால், வழக்கமான கட்டணத்தை விட 2 மற்றும் 3 மடங்கு அதிகமாக விமானக் கட்டணங்கள் இருந்தன. உதாரணமாக, வழக்கமான நாள்களில் குறைந்தபட்சம் ரூ. 3000 ஆகவும், பெங்களூருக்கு ரூ.3,750, ஹைதரபாத்துக்கு ரூ.4,500, மும்பைக்கு ரூ. 5000 என்ற வகையிலிருக்கும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சென்னைக்கு ரூ.12,000, பெங்களூர் ரூ.9000, ஹைதராபாத் ரூ.12,000, மும்பைக்கு ரூ. 19,000 என்ற வகையில் கட்டணங்கள் உயர்ந்து இருந்தன.