போலீஸ்கிட்ட போவியா, எவனாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என கூறி திருச்சி அருகே ஆயுதங்களுடன் முதியவரை சாலையில் தாக்கிய இருவர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, தண்டாங்கோரை பகுதியில், நூற்றாண்டு பழமையான பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது.
இந்த பிள்ளையார் கோவிலை அப்பகுதியில் வசித்து வரும் முதியவர் தெய்வராஜன் என்பவர் பராமரித்து குடமுழுக்கு நடத்தலாம் என கூறி உள்ளூர் பொது மக்களிடம் ஆதரவு திரட்டி இருக்கிறார்.
இதனிடையே, கோவில் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து, குடமுழுக்கு நடத்த எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் இருக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்ற முதியவர், பின் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரை அரிவாள் உட்பட பயங்கர ஆயுதத்துடன் 2 பேர் மர்ம கும்பல் வழிமறித்து இருக்கிறது.
முதியவரை சாலையில் முகம் மற்றும் நெஞ்சில் மிதித்து அரிவாளால் மிரட்டி, சாலையில் வீழ்ந்த முதியவரின் நெஞ்சில் கால்களை வைத்து, தலைமுடியை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
முதியவரை தாக்கும் நபர்கள், “எங்களை யாராலும் கேள்வி கேட்க முடியாது. நாங்கள் யார் தெரியுமா? போலீசுக்கு போன் போடு. என்னடா பண்ணுவ? ___ மவனே என பொது இடத்திலேயே சொல்கிறேன், எங்களை ஒன்றும் செய்ய இயலாது. உட்காருடா ___, நாங்கள்தான் இங்க. இங்கே உன்ன போட்டுட்டு போயிருவோம். நாங்கள் யார் என நினைத்த.. ( சாவுடா ___) எவனாலும் எங்களை ஒன்றும் செய்ய இயலாது. என்ன?” என பேசினர்.
இதன் பதைபதைப்பு காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், முதியவரின் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொது இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கையில் அரிவாளுடன் தாக்குதல் நடத்திய கும்பலை பொதுமக்கள் எவர் ஒருவரும் தட்டிக் கேட்காமல் செய்வதறியாது வேடிக்கை பார்த்து கடந்து சென்றது வேதனைக்குரியது .