Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் எனக்கு உள்ள தொடர்பு? திருச்சியில் நாக்கை பிளவுபடுத்தி டாட்டூ வரைந்த வாலிபர் ஜாமினில் வெளிவந்து பரபரப்பு பேட்டி .

0

ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை ,பாடி மாடிஃபிகேசன் யாரும் செய்து கொள்ளாதீர்கள், நான் செய்தது தவறு என நாக்கு பிளவு விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளி வந்த இளைஞர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாநகரம் வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 25). இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூஸ் என்ற பெயரில் டாட்டூ கடை நடத்தி வந்தார் . இவர் தன்னுடைய நாக்கை நுனியை பிளவுபடுத்தி அதில் டாட்டூ வரைந்து உள்ளார். அதே போல அவருடைய நண்பரும் உடன் பணியாற்றுபவருமான ஜெயராமன் என்பவருக்கு நாக்கின் நுனியை வெட்டி டாட்டூ வரைந்துள்ளார். அதனை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

எந்தவித அனுமதியும் பெறாமல் இது போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலை செய்ததன் காரணமாக ஹரிஹரனை திருச்சி கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது டாட்டூ கடையும் மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரனுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதனையடுத்து சிறையிலிருந்து நிபந்தனை ஜாமினில் இன்று விடுவிக்கப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஹரிஹரன், அதில் கூறியிருப்பதாவது :-

“பாடி மாடிஃபிகேஷன் என்ற நாக்கு பிளவு முறையினை மும்பை சென்று எனது அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டேன். இது குறித்து முறையாக நான் கற்கவில்லை என்ற புகாரின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டேன்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், டிஐஜி வருண் குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சிறையில் எனக்கு மனநல சிகிச்சை வழங்கப்பட்டது. பாடி மாடிஃபிகேஷன் செய்வது தவறு என்றும் எனக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதனை நான் புரிந்து கொண்டேன். யாரும் பாடி மாடிஃபிகேஷன் செய்ய வேண்டாம். இந்தியாவில் இதுவரை 10 பேர் மட்டுமே பாடி மாடிஃபிகேஷன் செய்துள்ளனர். நானும் அவ்வாறு செய்தேன் தற்பொழுது அது தவறு என்பதை புரிந்து கொண்டுள்ளேன். இனி யாருக்கும் இது போன்ற பாடி மாடிஃபிகேஷனை நான் செய்ய மாட்டேன்.

நான் கைது செய்யப்பட்ட பின் சில ரவுடிகளுடனும் அரசியல்வாதிகளுடனும் எனக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவியது, அது முற்றிலும் தவறான தகவல், எனக்கு யாருடனும் எந்த தொடர்பும் இல்லை, நான் எனது வயிற்று பிழைப்புக்காக டாட்டூ வரையும் கடை நடத்தி வருகிறேன். அது தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை” என கூறினார் .

Leave A Reply

Your email address will not be published.