Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்டம் வென்றது இந்தியா

0

ஆடவருக்கான ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியா வெல்லும் பட்டம் இது. மொத்தமாக 5 முறை இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் நகரில்  நேற்று புதன்கிழமை அன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

இந்தியா சார்பில் அரைஜீத் சிங் நான்கு கோல்களை பதிவு செய்தார். 4, 18 மற்றும் 54-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். அது தவிர 47-வது நிமிடத்தில் நேரடியாக எதிரணியின் வலைக்குள் பந்தை தள்ளி கோல் பதிவு செய்து அசத்தினார். இந்தியாவின் மற்றொரு கோலை தில்ராஜ் சிங் 19-வது நிமிடத்தில் பதிவு செய்திருந்தார்.

பாகிஸ்தான் தரப்பில் சுஃப்யான் கான், 30 மற்றும் 39-வது நிமிடத்தில் இரண்டு பெனால்டி வாய்ப்புகளை கோல் ஆக்கினார். ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் ஹன்னன் ஷாஹித் ஒரு கோலை பதிவு செய்திருந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றிருந்தது. 2004, 2008, 2015, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.