ரூ.90 ஆயிரம் மகளிர் சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்த திருச்சி கலெக்டர். கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி .
காந்தி மார்க்கெட் கூலித் தொழிலாளியின் ரூ.90 ஆயிரம் மகளிர் சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்த திருச்சி கலெக்டர்.
திருச்சி மாநகரம் பாலக்கரை தாமோதரன் எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 42), கூலித் தொழிலாளியான இவர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கி வருகிறார். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு காரத்தி (வயது 13) என்ற, 9ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார்.
பாலக்கரை பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் வள்ளி கடன் வாங்கியுள்ளார்.
இதற்கிடையே வள்ளிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி, சென்னை, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், வள்ளி வாங்கிய கடன் வட்டியோடு, 90 ஆயிரம் ரூபாயை உடனடியாக கட்ட வலியுறுத்தி, மோகனிடம் குழுத் தலைவி உள்ளிட்டோர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், வாடகை வீட்டில் இருக்கும் மோகன் மற்றும் அவரது மகனை, பணம் தராவிட்டால், வீட்டை காலி செய்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.
மனைவியின் சிகிச்சைக்காக ஏற்கனவே கடன் வாங்கி மோகன் செலவு செய்த நிலையில், தற்போது தினந்தோறும் வாழ்வாதாரத்திற்கே போராடி வருகிறார்.
மேலும், மகனை நன்றாக படிக்க வைக்க விரும்பும் மோகன், தொடர் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், கடந்த, 11ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டத்தில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம், கண்ணீர் மல்க மோகன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில், ‘தனது மகன் நன்றாக படிக்க வைக்க வேண்டும். அதற்குரிய உதவி செய்ய வேண்டும். அதற்காக, எனது மனைவி வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
கோரிக்கையை ஏற்ற கலெக்டர், மோகன் மனைவி வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டு உள்ளார்.
அதையடுத்து, மோகனை இன்று அழைத்த மகளிர் திட்ட அதிகாரிகள், கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விபரத்தை எழுத்துப்பூர்வமாக வழங்கினர்.
இதனால் பெருமகிழ்ச்சி அடைந்த மோகன், திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
மேலும், தனது மகனின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
*டாக்டராக விருப்பம்!*
“எனது தாய் ரத்தப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். எங்களிடம் பணம் இல்லாத காரணத்தினால் எனது தாயை காப்பாற்ற முடியவில்லை.
எனவே, நான் நன்றாக படித்து, டாக்டர் ஆவேன். ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பேன்” என்று மோகனின் மகன் கார்த்தி தெரிவித்தார்.