Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: அதிமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா பதில்.

0

 

திருச்செந்துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வக்பு வாரிய இடத்திற்கு சொந்தமானதாக சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி பொதுமக்கள் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் திருச்சி திருச்செந்துறை கிராமம் இடம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வக்பு வாரிய சொத்துக்கள் குறித்த ஒரு சட்டத் திருத்தம், இந்திய பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்டது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜூ நாடாளுமன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் வக்பு வாரிய இடமாக உள்ளது என பேசியதால் இந்திய அளவில் இந்த கிராமம் பேசும் பொருளானது.

இந்நிலையில் திருச்செந்துறை கிராமத்தில் உள்ள கோவிலில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா சாமி தரிசனம் செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறுகையில்..

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. ஆனால் கோவில் உள்ளிட்ட இடங்கள் எங்களுக்கு சொந்தமான இடங்கள் என வக்பு வாரியம் உரிமை கோரியது.

இதே போல தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கோயம்புத்தூர், வெல்லூர் இந்த மாதிரி பல மாவட்டங்களில் அதிகமான இடங்கள் எங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் உரிமை கூறியது. வக்பு வாரியம் 1995 ஆம் ஆண்டு சட்டம் வரும்போது இவர்களுக்கு சொந்தமாக 4- லட்சம் ஏக்கர் மட்டுமே சொந்தமாக இருந்தது.

ஆனால் இன்று 9,40,000 ஏக்கர் நிலங்கள் தற்போது வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக உள்ளது. இவை எல்லாமே எந்த ஆதாரமும் இல்லாமல் தற்பொழுது உரிமை கோருவது ஏற்கத்தக்கது அல்ல என கண்டனம் தெரிவித்தார்.

இந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை இஸ்லாமிய தலைவர்களும் வரவேற்கின்றனர்.வக்பு வாரிய இட ஊழலுக்கு காரணம் காங்கிரசும் திமுகவும் தான் எனவும் குற்றம் சாட்டினர். தற்போது இந்து சமய அறநிலைத்துறை என்பது இந்து மக்களுக்கு எதிராகவே உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் பொய்யர்கள் ஆட்சி நடக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நான் இந்த கிராமத்திற்கு வந்தபோது அப்போது இந்த ஊரில் இடத்தை விற்பனை செய்ய வக்பு வாரியத்தில் அனுமதி வாங்க வேண்டிய நிலை இருந்தது,
பின்னர் மக்கள் போராட்டத்தால் எழுச்சியால் தற்போது அரசு இந்த பிரச்சனையில் பின்வாங்கியுள்ளது.

நாங்கள் பாஜகவின் சாதனைகளை தான் மக்களிடம் கூறி வருகிறோம், ஆன்மீகம் பற்றியும், நீதி போதனைகள் பற்றியும் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளியைவிட, தனியார் பள்ளி தரமாக உள்ளது.

தமிழக ஆளுநர் அவர்கள் பேசியது மிகச் சரியான கருத்து.. தமிழ்நாட்டில் கல்வியின் தரம் சரியில்லை என தெரிவித்தார். பி எம் ஸ்ரீ திட்டத்திற்கு நிதி தரவில்லை என இங்கு உள்ள ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அந்த திட்டத்திற்கு நீங்கள் கையெழுத்து விட்டால் தான் நிதி தர முடியும் என்பது விதி.

ஆளுநர் அவர்கள் ரெண்டு விஷயம் தெளிவா கேட்டு இருக்காரு, பத்தாவது படிச்ச பையனுக்கு பாடம் படிக்க வரல இது பல சர்வேயில சொல்லப்பட்ட விஷயம் தான்.

அதே மாதிரி 8-ம் வகுப்பு படிக்கும் பையனுக்கு மூணாங்கிளாஸ் கணக்கு போட வரல … அப்போ தனியார் பள்ளியில சிலர் படிச்சு தனிப்பட்ட முயற்சியாலும், அரசு பள்ளியில் படித்தும் ஒரு சிலர் தங்கள் லட்சியத்தை அடைகின்றனர்.

அரசு பள்ளியில் கற்பித்தல் தரம் குறைவாக உள்ளது என்பது தான் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளியில் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. ஆனால் கல்வியின் தரம் தனியார் பள்ளியில் நன்றாக உள்ளது. ஆகையால் ஆளுநர் கூறியது சரி என தெரிவித்தார்.

அதிமுகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கு இது குறித்து கேள்விக்கு நான் கூறுவது சரியாக இருக்காது தலைமை தான் கூற வேண்டும் என தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது திருச்சி பாஜக மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.