இந்து முஸ்லிம்கள் இடையே மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சச்சிதானந்தம் எம்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி காவல் நிலையத்தில் புகார் .
பழனி முருகன் கோவிலில் இஸ்லாமியர்கள் வழிபாடு சர்ச்சை பேச்சு திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் மீது நடவடிக்கை வேண்டும்
திருச்சி போலீசில் இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் புகார் மனு .
இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக இந்து சமய அறநிலை துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 24, 25 ந்தேதிகளில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டின் நிறைவு நாளான 25ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது “நமது பழனிக்கு ஒரு பெருமை உண்டு. பழனி மலை கோவிலில் முருகன் சன்னதிக்கு பின்புறமாக இஸ்லாமியர்களும் சென்று வழிபடும் ஒரு நடைமுறை இருக்கிற கோவிலாக இந்த கோவில் உள்ளது” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
பழனி தண்டாயுதபாணி மலைக்கோவிலின் உச்சி பகுதியில் மூலவராக தண்டாயுதபாணி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அந்த மலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமியின் நான்கு புறமும் இந்து கடவுள்களை தவிர வேறு மத தெய்வங்கள் இல்லை.
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் அரசு சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் பழனி முருகன் கோவிலில் சன்னதிக்கு பின்புறமாக இஸ்லாமியர்களும் சென்று வழிபடும் ஒரு நடைமுறை இருக்கிற கோவிலாக இந்த கோவில் உள்ளது என்று சர்ச்சைக்குரிய வகையிலும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசி உள்ளார்.
எனவே இந்த பேச்சு மூலம் பழனியில் வாழும் இந்து- முஸ்லீம்கள் இடையே திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிவினையை தூண்டுகிறாரோ என்ற சந்தேகம் பொது மக்களிடையே எழுந்துள்ளது.
எனவே இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையிலும், மத கலவரத்தை தூண்டும் வகையிலும், இந்து- முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், பழனி தண்டாயுதபாணி மலைக்கோவிலில் இஸ்லாமியர்கள் உரிமை கோரி போராட்டம் நடத்தும் வகையிலும் பேசியுள்ள சச்சிதானந்தன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் மகேஸ்வரி வையாபுரி குறிப்பிட்டுள்ளார்.