சிறை கைதிகளுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களை வெளி மார்க்கெட்டில் விற்ற பெண் துணை சிறை அலுவலர் சஸ்பெண்ட்.
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆசாத் கா அமீர்த் மஹோத்தவா என்ற திட்டத்தின் அடிப்படையில் தண்டனை பெற்ற சிறைக்கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு அனுமதி அளித்தது.
அதன் அடிப்படையில் தமிழக அரசின் அனுமதி பெற்று, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து, முக்கிய நாட்களில் தண்டனை கைதிகளை விடுதலை செய்து தமிழக சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டு வருகிறது.
நன்னடத்தை அடிப்படையில் இப்படி விடுதலையாகும் கைதிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறைத்துறை நிர்வாகம், அரசு சாரா அமைப்புக்களின் உதவியுடன் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், இனிப்பு, வழங்கி அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறது.
சிறையிலுள்ள கைதிகள் மட்டுமல்லாமல், விடுதலையாகி செல்லும் சிறைக்கைதிகளின் நன்மையை கருத்தில் கொள்ளும் அளவுக்கு, இவர்களுக்கு ஒதுக்கப்படும் மளிகை பொருட்கள் மிக முக்கியத்துவம் பெறக்கூடியவையாகும். இந்த மளிகை பொருட்களைதான், திருட்டுத்தனமாக, சிறை கண்காணிப்பாளரே வெளியில் விற்பனை செய்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு, 40க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்கான உணவு வழங்க, கூட்டுறவுத்துறையில் இருந்து அரிசி, மளிகை பொருள் கொள்முதல் செய்யப்படுகிறது..
இங்கு, கூட்டுறவு பண்டக சாலையில் இருந்து வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வெளிச்சந்தையில் கள்ளத்தனமாக விற்பதாக தகவல் கிடைத்தது. அதாவது, மளிகை பொருட்கள் தரமில்லை என்றும், மீதியாகும் பொருட்களை, வெளி மார்க்கெட்டில் விற்றுவிடுவதாகவும் புகார் எழுந்தது.
இதனால் சேலம் மத்திய சிறை எஸ்.பி., வினோத், விஜிலன்ஸ் போலீசார், ஒரு வாரத்துக்கு முன்பே, ஆத்துார் சிறைச்சாலைக்கு சென்று நேரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் மற்றும் சிறை விஜிலென்ஸ் அதிகாரிகள் நடத்திய இந்த திடீர் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. கைதிகளுக்கு உணவு வழங்குதல், உணவு தரம், உணவு லிஸ்ட் குறித்து கேட்டறிந்தனர். சிறை கைதிகளிடம், பாதுகாப்பு வசதி, குறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அப்போது, வெளி விற்பனைக்காக 23 மூட்டைகளில் வைத்திருந்த அரிசி, பருப்பு, நிலக்கடலை, ஆயில் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு தரமான பொருட்களை மளிகை கடைகளுக்கு கொடுத்து, தரம் குறைந்த பொருட்களை அங்கிருந்து சிறைக்கு அனுப்புவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல, தட்டச்சு அறையில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 23 வகை மளிகை பொருட்கள் தனியாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவைகளை பறிமுதல் செய்து, சிறை உணவு பொருள் கிடங்கில் ஒப்படைத்த அதிகாரிகள், இது சம்பந்தமாக துணை சிறை அலுவலர் வைஜெயந்தி, பணிபுரியும் காவலர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக விளக்கம் தருமாறு, துணை சிறை அலுவலர் வைஜெயந்திக்கு, எஸ்பி வழங்கினார்.
அதேபோல, சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாளுக்கும் விசாரணை அறிக்கையை அனுப்பினார்.
உணவு பொருள் பாதுகாப்பிற்கு, துணை சிறை அலுவலர் தான் பொறுப்பு என்பதால், பறிமுதல் செய்த பொருட்கள் குறித்து, துணை சிறை அலுவலர் வைஜெயந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக, சென்னை தலைமை அலுவலகத்திற்கு, துறைரீதியான விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், உயர் அதிகாரிகள் உத்தரவுக்கு பின், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடந்த வாரமே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இறுதியில், வைஜெயந்தி செய்த தில்லுமுல்லு உறுதியானதையடுத்து, சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத், மாவட்ட சிறை கண்காணிப்பாளர் வைஜெயந்தியை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். உதவி சிறை அலுவலர் ஒலிமுத்துவுக்கு, துணை சிறை அலுவலர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சிறை கண்காணிப்பாளரே,
அதுவும் பெண் அதிகாரியே இப்படியொரு மோசடியில் இறங்கி கைதாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.