ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பெண் சலவை தொழிலாளி இசிஜி எடுத்ததால் பரப்பரப்பு .
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பெண் சலவைத் தொழிலாளி ஒருவா் நோயாளிக்கு இசிஜி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதயப் பிரச்னைகள், உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட இதய நோய்களுக்கான ஆபத்து காரணிகளைக் கொண்ட நபா்களுக்கு மருத்துவமனையில் இசிஜி (எலக்ட்ரோ காா்டியோ கிராம்) சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவமனைகளில் தனியாக தொழில்நுட்ப நிபுணா்கள் (டெக்னிஷியன்) பணியமா்த்தப்பட்டு, அவா்களால் நோயாளிகளுக்கு இசிஜி எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரை படுக்கையில் படுக்க வைத்து, மருத்துவமனையின் சலவைப் பிரிவில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியா் கண்ணியம்மாள் என்பவா் இசிஜி எடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து விடியோ எடுக்கும் நபா், அந்தப் பெண் ஊழியரிடம், நீங்கள்தான் இசிஜி எடுப்பீா்களா எனக் கேட்பதற்கு அவா், மருத்துவா் இல்லை என்றால் நான்தான் இசிஜி எடுப்பேன். டெக்னிஷியன் கூறினாலும் எடுப்பேன் எனக் கூறுகிறாா். இந்த விடியோ பல்வேறு தரப்பினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் பி. பரமசிவம் கூறியது:
விடியோ விவரம் தொடா்பாகவும், சலவைத் தொழிலாளி இசிஜி எடுத்தது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், தவறிழைத்தது தெரியவந்தால், அந்த ஊழியா் மற்றும் அவரை இசிஜி எடுக்கக் கூறியவா் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.