திருச்சி:கஞ்சா வியாபாரியை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் . போலீசார் வந்து கஞ்சா வியாபாரியை விடுவித்து சென்றனர். இளைஞர்கள் அதிர்ச்சி
திருச்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே இரண்டு நபர்கள் வெகு நேரமாக நின்று கொண்டு, அவர்கள் வைத்திருந்த கஞ்சாவை சிகரெட்டில் வைத்து புகைத்துக் கொண்டிருந்தனர்.
இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர், அந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், ‘நாங்கள் பெரம்பலூரை சேர்ந்த விக்னேஷ், வேல்முருகன். கஞ்சா வாங்குவதற்காக இங்கு காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பிடிபட்ட இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்பவருக்கு போன் செய்யும்படி கிராம இளைஞர்கள் வலியுறுத்தினர். உடனே கஞ்சா வியாபாரம் செய்யும் பெண் கஞ்சா வியாபாரியிடம் அவர்கள் போனில் பேசினர். அதனால், சிறிது நேரத்தில் பெண் கஞ்சா வியாபாரி, ஆறுமுகம் என்பவரிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பினார். புங்கனூர் சாலையில் கஞ்சா வாங்க வந்த இளைஞனிடம் ஆறுமுகம் புல்லட்டில் கஞ்சாவை கொடுக்க வந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த கிராம இளைஞர்கள் கஞ்சா வியாபாரி ஆறுமுகத்தை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால், ஆறுமுகம் புல்லட்டை சாலையின் நடுவே போட்டு விட்டு கருவேல மர காட்டுக்குள் தப்பி ஓடி மறைந்தான்.
இதனை தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்கள் விரட்டிச் சென்று ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து அமர்வு நீதிமன்றக் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தகவலறிந்த உதவி ஆய்வாளர்கள் பாலன் மற்றும் குமார் ஆகிய இருவரும் கஞ்சா வாங்க வந்த விக்னேஷ், வேல்முருகனிடம் விசாரித்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையில், அந்தப் பகுதி இளைஞர்கள் விரட்டி பிடித்த கஞ்சா வியாபாரி ஆறுமுகத்தை அமர்வு நீதிமன்றக் காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் எஸ்.ஐ பாலன், ‘புங்கனூர் எங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது இல்லை’ என்று ஆறுமுகத்தை பிடித்துச் செல்லாமல் நின்று கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து எஸ்.ஐ பாலனிடம், ‘பேசி தீர்த்துக்கலாம்’ என்று கூறி ஆறுமுகத்தை அழைத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதைக் கண்ட புங்கனூர் கிராம இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கஞ்சாவையும், அதை இரண்டு இளைஞர்களிடம் விற்க வந்தவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தால், ஏதோ ஒரு காரணம் சொல்லி அவர்களைப் பிடித்து விசாரணை செய்யாமல் அந்த நபரை விடுவித்து போலீஸார் அலட்சியமாகச் சென்றது, அவர்களை அதிரவைத்தது.
‘நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸாரே அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது போல் நடந்து கொண்டதால், போலீஸாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி கஞ்சா வியாபாரியை கைது செய்ய வேண்டும்’ என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்