திருச்சி: பொதுஇடத்தில் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்த இந்து அமைப்புகள் எதிா்ப்பு தெரிவிப்பதால் போலீஸாா் குவிப்பு.
திருச்சி மாநகராட்சி 40 ஆவது வாா்டுக்குள்பட்டது திருவெறும்பூா் இந்திரா நகா் பகுதி. இங்கு வீட்டுமனைகளைப் பிரித்தபோது பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் இஸ்லாமிய சமூகத்தினா் மசூதி கட்ட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினா் எதிா்ப்புத் தெரிவிப்பதால் பிரச்னை உள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரு நாள் தொழுகை நடத்திக் கொள்ள திருச்சி ஆா்டிஓ அருள் அனுமதித்து, இந்து அமைப்பு நிா்வாகிகளை அழைத்து, பிரச்னை செய்யக் கூடாது எனத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பிரச்னைக்குரிய இடத்தை பாஜக, விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் சனிக்கிழமை பாா்வையிட்டதுடன், குழந்தைகள் விளையாட அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த இடத்தை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினா் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க முடியாது. அப்படி அவா்கள் முயற்சித்தால், நாங்களும் அந்த இடத்தில் வழிபாடு நடத்துவோம் எனக் கூறிச் சென்றனா். இதைத் தொடா்ந்து அந்த இடத்தில் திருவெறும்பூா் டிஎஸ்பி (பொ) பழனி தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
ஏற்கெனவே கடந்த மாா்ச் 18 ஆம் தேதி குறிப்பிட்ட இடத்தில் மசூதி கட்ட முயற்சித்ததற்கு இந்து அமைப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து திருவெறும்பூா் பேருந்து நிலையத்தில் மறியல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.