Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முன்னாள் சார்பதிவாளரின் சொத்து மதிப்பு ரூ.100 கோடி. சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்க திருச்சி கோர்ட் உத்தரவு .

0

 

திருச்சி: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்க திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தைச் சேர்ந்த 79 வயதாகும் ஜானகிராமன், தமிழ்நாட்டில் சார்பதிவாளராக பணிபுரிந்தவர். இவர் சார்பதிவாளராக 90களில் பணிபுரிந்தார். இவருர் சார் பதிவாளராக இருந்த 1989-1993 காலக்கட்டத்தில், திருச்சி மாவட்டம் துறையூர், உறையூர், முசிறி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்துள்ளார்.

இந்த காலக்கட்டத்தில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகி ராமன் அவரது வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி (வயது65) பெயரிலும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் அப்போதைய மதிப்பு ரூ.32,25,532/- (ரூபாய் முப்பத்தி இரண்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐநூற்றி முப்பத்தி இரண்டு மட்டும்) ஆகும். அதாவது வழக்கமான சொத்தை விட 98% ஆகும்.

இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன்பேரில், கடந்த 17.08.2001 அன்று அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவில் காவல் ஆய்வாளர் அம்பிகாபதி என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் புலன் விசாரணை நீண்ட காலமாக நடந்து வந்தது. அதன்பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை நடந்தது.

இந்த வழக்கின் விசாரணை 20 ஆண்டுகளை தாண்டி நடந்து வந்தது.. வழக்கின் விசாரணை காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் மேற்பார்வையில் தற்போது நடந்தது வந்தது. சிறப்பு அரசு வழக்குறைஞர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் சேவியர்ராணி மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் இந்த வழக்கை நடத்தி வந்தனர்

இந்நிலையில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகி ராமன்,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் இன்று தீர்ப்பளித்தார். இதன்படி முதல் குற்றவாளியான முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் மற்றும் இரண்டாவது குற்றவாளியான அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

இதன் படி முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமன், அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் சுமார் 100 கோடிக்கும் மேல் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசு அதிகாரி ஒருவர் 100 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து சொத்து சேர்த்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.