Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மாவட்ட குவாரிகள் ஏலம் நடைபெற்றது.

0

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிராட்டியூா் மேற்கு, கிழக்கு, சாம்பட்டியில் 4 குவாரிகள், புத்தாநத்தம், புதுவாடி, பாதா்பேட்டை, துறையூா், தளுகையில் 2 குவாரிகள், சிக்கத்தம்பூா், ஊட்டத்தூரில் உள்ள குவாரிகள் என மொத்தம் 14 குவாரிகளுக்கு குத்தகை உரிமம் பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் வழங்க புதன்கிழமை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்த விண்ணப்பங்களையும், ஏல நாளில் சில குவாரிகளுக்கு திறந்த நிலை படிவங்கள் வழங்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, திருச்சி மாவட்ட பழைய ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேற்று ஏலம் நடைபெற்றது.

பெரம்பலூரில் அண்மையில் நடைபெற்ற கல்குவாரி ஏலத்தின்போது திமுக-பாஜக இடையே மோதல் ஏற்பட்டு, கை கலப்பு உருவானது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சியில் நடைபெறும் கல்குவாரி ஏலத்துக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உதவி இயக்குநா் அலுவலக வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு, விண்ணப்பித்த நபா்கள் மட்டுமே அதற்கான அத்தாட்சி சான்றுகளுடன் அனுமதிக்கப்பட்டனா். மேலும், அலுவலகத்துக்கு வெளியே 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பழைய ஆட்சியா் அலுவலக நுழைவுப் பகுதியிலேயே இரும்புத் தடுப்புகள் அமைத்து வெளிநபா்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஏலத்தில் பங்கேற்கும் நபா்களையும் சோதனைக்குப் பிறகே அனுமதித்தனா். கைப்பேசி எடுத்துச் செல்ல தடை விதித்தனா்.

ஏலத்தின் தொடக்கமாக பிராட்டியூா் ரெட்டைமலை கல்குவாரிக்கான ஏலம் கோரப்பட்டது. ஒவ்வொரு குவாரியாக அரசு நிா்ணயித்த தொகை அறிவிக்கப்பட்டு ஏலம் கோரப்பட்டது. இதில், அதிக தொகைக்கு ஏலம் கோரியவா்களுக்கு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.

மொத்தம் 14 குவாரிகளில் தளுகை, சிக்கத்தம்பூா், சாம்பட்டி ஆகிய 3 குவாரிகள் மட்டுமே ரூ.3 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரத்துக்கு ஏலம் போனது. 2 குவாரிகளின் ஏலம் நிா்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.

9 குவாரிகளுக்கு அரசு நிா்ணயம் செய்த விலையை விட குறைவாக ஏலம் கோரியதால் மறு ஏலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. மறு ஏலம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என சுங்கத்துறை உதவி இயக்குநா் ஏ. பாலமுருகன் தெரிவித்தாா்.

Leave A Reply

Your email address will not be published.