Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விலை உயர்ந்த பைக்குகளை சென்னையில் திருடி திருச்சியில் விற்ற வாலிபர்கள் கைது.

0

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). இவர் கடந்த 16 ஆம் தேதி வழக்கம்போல பணி முடிந்து வீட்டிற்கு சென்று, தனது கேடிஎம் பைக்கை வாசலில் நிறுத்திட்டு தூங்க சென்றுள்ளார்.மறுநாள் காலையில் பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் தேடியும் பைக் கிடைக்காததால் அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கே.கே.சாலையில் நம்பர் பிளேட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் அதிக வேகமாக சென்றதை பார்த்த தனிப்படை போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.வாகன பதிவு எண்ணை கூறும்படி போலீசார் கேட்ட போது பதிவு எண் தெரியாமல் மூவரும் விழித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தின் RC புக்கை கேட்டுள்ளனர். அதையும் இல்லை என்று கூறியதால் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மூவரும் வந்த யமஹா ஆர்15 பைக் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி சென்னை மணலி புதுநகர் பகுதியில் திருடியது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த இளவரசன் (வயது 24) யாழின்ராஜ் (24) சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த அசோக் (வயது 24) என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இளவரசன் மீது திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் கடந்த 7 ஆண்டுகளில் திருட்டு, வழிப்பறி, வீடு உடைப்பு உள்ளிட்ட வழக்குகளில் சிறை சென்று வந்ததும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்று வந்தது தெரியவந்துள்ளது. இதேபோல யாழின்ராஜ் மீது கடந்த 2021ம் ஆண்டு பெண்ணை கடத்திய வழக்கு, ஆள் கடத்தல் வழக்குகளில் சிறை சென்றதும், 12ம் வகுப்பு முடித்து விட்டு மருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ் சென்று வந்ததும், கடைசியாக சுகாதார ஆய்வாளராக தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று பணி உத்தரவுக்காக காத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மூவரிடமும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த இளவரசன், யாழின்ராஜ் இருவரும் சிறையில் இருக்கும்போது தங்களுடன் சிறையில் இருந்த அசோக்வுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அசோக் சென்னையில் திருடும் பைக்குகளை திருச்சிக்கு எடுத்து வந்து இளவரசன் மற்றும் யாழின்ராஜிடம் விற்பனைக்கு கொடுத்துவிட்டு அவர்களிடம் பணம் வாங்கி கொண்டு சென்னைக்கு திரும்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே யாழின்ராஜ், இளவரசன் ஆகியோர் அதிக குற்றச்சம்பத்தில் ஈடுபட்டு வருவதால் ஒரு கட்டத்தில் போலீசார் அவர்களை கடுமையாக எச்சரித்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் யாழின்ராஜின் மனைவிக்கு வலிப்பு நோய் உள்ளதால் பனியன் கம்பெனியில் வேலை செய்வதால் வரும் வருமானம் போதுமானதாக இருக்காது என்பதால் மீண்டும் திருட்டு தொழிலில் ஈடுபட்டு மனைவியின் நோயை குணப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். உடனே தனது சிறை நண்பன் அசோகை தொடர்புக்கொண்டு மனைவியின் நிலையை தெரிவித்துள்ளார்.

உடனடியாக சென்னைக்கு வாங்க அதிக பைக் இருக்கு எடுத்து தரேன் என அசோக் நம்பிக்கை அளித்துள்ளார். அசோக்கின் வார்த்தையை நம்பி இருவரும் திருச்சியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த நண்பர்களுக்கு கஞ்சா வாங்குவதற்காக சென்னை மணலி புதுநகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார் அசோக். கஞ்சா வாங்கிய மூவரும் அங்கிருந்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிக்கு திரும்புதற்காக அந்த பகுதியில் இருந்து விலை உயர்ந்த R15பைக்கை திருடியுள்ளனர்.

பின்னர் அதே பைக்கில் சென்று எங்கெல்லாம் பைக் திருட முடியும் என்று நோட்டமிட்டுள்ளனர். மணலியில் திருடிய பைக்கை வைத்து மேலும் பல பைக்குகள் திருட நோட்டமிட்டபோது மூவரும் போலீசில் சிக்கியுள்ளனர். மேலும் கடந்த 16 ஆம் தேதி திருடுப்போன அருண்குமாரின் பைக்கை சோழிங்கநல்லூர் ஏரிக்கரை பகுதியில் பதுக்கி வைத்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.